மாட்லாம்பட்டியில் கொரோனாவுக்கு பெண் பலி


மாட்லாம்பட்டியில் கொரோனாவுக்கு பெண் பலி
x
தினத்தந்தி 11 April 2021 2:46 AM GMT (Updated: 11 April 2021 3:28 AM GMT)

மாட்லாம்பட்டியில் கொரோனாவுக்கு பெண் இறந்தார்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பைசுஅள்ளி ஊராட்சி மாட்லாம்பட்டியில் 1,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த 55 வயது பெண் சில மாதங்களுக்கு முன்பு வெளியூர் சென்று வீடு திரும்பினார். வீடு திரும்பிய சில நாட்களில் காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

பரிசோதனையின் முடிவில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அந்த பெண் உயிரிழந்தார். 

இந்த நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் மற்றும் கூலித் தொழிலாளிகள் என 27 பேர் கொரோனா பரிசோதனை செய்து இருந்தனர். அதற்கான முடிவுகள் நேற்று வந்த நிலையில் 27 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 27 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை தொடர்ந்து மாட்லாம்பட்டி கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வெளி நபர்கள் உள்ளே நுழையாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதுகுறித்து கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமஜெயம், மணிவண்ணன், ஊராட்சி செயலாளர் குமார் மற்றும் சுகாதாரத்துறையினர் மாட்லாம்பட்டிக்கு சென்றனர். மேலும் அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொண்டனர். கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஒரே கிராமத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story