வாணியம்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்
வாணியம்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய ஒன்றிய தி.மு.க.செயலாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாணியம்பாடி
-
வாணியம்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய ஒன்றிய தி.மு.க.செயலாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாக்கு எண்ணும் மையம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் மே 2-ந் தேதி நடக்கிறது.
இதனையொட்டி வாக்குப்பதிவு முடிந்ததும் 4 தொகுதிகளிலும் வாக்குகள் பதிவான மின்னணு எந்திரங்கள் இந்த கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு தொகுதி வாரியாக வைக்கப்பட்டு அறைகள் சீல் வைக்கப்பட்டன.
கல்லூரியின் 4 மாடி கட்டத்தின் கீழ்தளத்தில் திருப்பத்தூர் தொகுதி, முதல் தளத்தில் ஜோலார்பேட்டை தொகுதி, அதற்கு மேல் உள்ள 2 தளங்களில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
அடிக்கடி சென்று வந்தனர்
வாக்கு எண்ணும் மையத்தினை அரசியல் கட்சி பிரமுகர்கள் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ராணி, வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஜோலார்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தேவராஜின் உறவினரும் முன்னாள் ஒன்றிய தி.மு.க. செயலாளருமான அசோகன் மற்றும் சிம்மனபுதூர் பகுதியை சேர்ந்த தண்டபாணி ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் அடிக்கடி மையத்திற்குள் சென்று வந்த வண்ணம் இருந்துள்ளனர்.
சப் இன்ஸ்பெக்டர் ராணி அவர்களிடம் அடிக்கடி உள்ளே சென்றுவர வேண்டாம். ஒவ்வொறு முறை சென்று வரும் போதும் வருகை பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இனிமேல் நீங்கள் சென்றால் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் என கூறியுள்ளார்.
ஒருமையில் பேசி மிரட்டல்
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அசோகன், தண்டபாணி இருவரும் சப்-இன்ஸ்பெக்டர் ராணியை ஒருமையில் பேசியுள்ளனர். இன்னும் 2 நாட்களில் உன்னை தூக்கிவிடுவேன் என அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி ராணி வாணியம்பாடி தாலூகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதில், ‘‘வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போது அசோகன், தண்டபாணி இருவரும் அடிக்கடி உள்ளே சென்று வந்தனர். அவர்களிடம் நோட்டில் பதிவு செய்துவிட்டு உள்ளே செல்லுங்கள் என கூறினேன். அதற்கு அவர்கள் என்னை ஒருமையில் பேசினர். அனைத்து போலீசார் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தினர்.
மேலும் இன்னும் 2 நாட்களில் உன்னை தூக்கிவிடுவோம் என மிரட்டல் விடுத்தனர். நடுநிலையோடு பணியாற்றி வரும் என்னை பணி செய்யவிடாமல் தடுத்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அசோகன் மற்றும் தண்டபாணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story