வேலூர் நேதாஜி மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்யக்கூடாது-வணிகர்கள் சங்கத்தினர் கோரிக்கை


வேலூர் நேதாஜி மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்யக்கூடாது-வணிகர்கள் சங்கத்தினர் கோரிக்கை
x
தினத்தந்தி 11 April 2021 12:30 PM GMT (Updated: 11 April 2021 12:30 PM GMT)

வேலூர் நேதாஜி மார்க்கெட் கடைகளை வேறுபகுதிக்கு இடமாற்றம் செய்யக்கூடாது என்று மாவட்ட நிர்வாகத்துக்கு வேலூர் அனைத்து வணிகர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

வேலூர் நேதாஜி மார்க்கெட் கடைகளை வேறுபகுதிக்கு இடமாற்றம் செய்யக்கூடாது என்று மாவட்ட நிர்வாகத்துக்கு வேலூர் அனைத்து வணிகர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்று நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி வேலூர் நேதாஜி மார்க்கெட் மொத்த விற்பனை காய்கறி கடைகள் மாங்காய் மண்டி அருகே உள்ள மைதானத்திற்கும், பூ கடைகள் ஊரீசு பள்ளி மைதானத்திற்கும் மாற்றப்படுகிறது.

வாரச்சந்தைகள் மற்றும் உழவர் சந்தைகளும் ஏற்கனவே நடைபெற்ற பள்ளி மைதானங்களில் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடைகளை வேறு பகுதிக்கு மாற்றினால் அனைவருக்கும் கடைகள் வழங்க முடியாது. எனவே நேதாஜி மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்று அங்குள்ள வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக வேலூர் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் சண்முக அடியார் மண்டபத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சங்க செயலாளர் பாபுஅசோகன், பொருளாளர் அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடைகளை இடமாற்றம் செய்யக்கூடாது

கூட்டத்துக்கு சங்க தலைவர் ப.ஞானவேலு தலைமை தாங்கி பேசியதாவது:- 

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் 120 காய்கனி மொத்த விற்பனை கடைகள், 160 சில்லறை விற்பனை தரை கடைகள், 80 மொத்த பூக்கடைகள், 20 தரை பூக்கடைகள் மற்றும் மளிகை, அரிசி, தேங்காய், வளையல் உள்ளிட்ட 556 கடைகள் உள்ளன.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் காய்கறி, பூக்கடைகளுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் மாற்று இடம் வழங்கியது. மீதமுள்ள 556 கடை வியாபாரிகள் பாதிப்புக்கு உள்ளாகினர். தற்போதும் அதேபோன்றதொரு நிலை உருவாக வாய்ப்புள்ளது.

எனவே நேதாஜி மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்யக்கூடாது. இரவு 1 மணி முதல் மாலை 4 மணி வரை நேதாஜி மார்க்கெட் கடைகள் இயங்க அனுமதி வழங்க வேண்டும்.

வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதியாக நேதாஜி மார்க்கெட் வணிகர்கள் சங்க அலுவலகத்தில் ஒரு மருத்துவக்குழுவை அமைக்க வேண்டும். 

நேதாஜி மார்க்கெட்டில் உள்ள 11 நுழைவுவாயிலும் சங்கத்தின் சார்பில் காவலர்களை அமர்த்தி முககவசம் அணியாதவர்களை மார்க்கெட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார். 

இதில், நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள், அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story