கொரோனா தடுப்பூசி பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


கொரோனா தடுப்பூசி பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 11 April 2021 7:07 PM IST (Updated: 11 April 2021 7:07 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம்சர்மா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
அதேபோல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை, கமலா நேரு மருத்துவமனை, சிட்கோ தொழிற்பேட்டை, சிப்காட் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தினமும் ஏராளமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகளை ஒருங்கிணைத்து விரைவு படுத்துவதற்காக மாவட்டந்தோறும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை அரசு நியமித்துள்ளது. 
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்துக்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மங்கத்ராம்சர்மா, நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி போடும் மையத்தை கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் வெளி மாநிலங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு வருபவர்களுக்கு உரிய பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே நகருக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். 
மேலும் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கப்படுகிறது.
76,250 பேருக்கு தடுப்பூசி

திண்டுக்கல்லில் உள்ள தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் என அனைத்து இடங்களிலும் அரசால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு சார்பில் 86-க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி போடும் மையங்கள், தனியார் சார்பில் 32 கொரோனா தடுப்பூசி போடும் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் இதுவரை 76 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போட விருப்பம் தெரிவிப்பவர்களுக்கும் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சிவக்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம், தாசில்தார் அபுரிஸ்வான் உள்பட பலர் உடன் இருந்தனர்.



Next Story