திருவாரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,695 வழக்குகளுக்கு தீர்வு
திருவாரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1695 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் சமரச தீர்வு காண்பதற்கு தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சாந்தி தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரராஜன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சமரச தீர்வு
இதைப்போல திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் நன்னிலம் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. அப்போது சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவானம்சம் உள்பட 3,115 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. அதில் விபத்து மற்றும் குடும்ப வழக்குகள் என மொத்தம் 1,695 வழக்குகளில் ரூ.70 லட்சத்து 46 ஆயிரத்து 283 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story