சுற்றுலா பயணிகளை கவர இசை நீரூற்று
கர்நாடகா அரசு பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக இசை நீரூற்று அமைக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசின் ஸ்ரீ தோட்டக்கலை பூங்கா உள்ளது. இது இயற்கை அழகுடன் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. மேலும் டாப்பியரி கார்டன் அலங்கார செடிகளுடன் புல்வெளி தோட்டத்துடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மலர்கள் கொட்டுவது போல் மலர் அருவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பூங்கா வளைந்து, நெளிந்து செல்லும் சிக்கலான பாதைகளை கொண்டது. கண்ணாடி மாளிகை மற்றும் நர்சரியில் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக பூந்தொட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.
மலர் செடிகள்
கோடை சீசனையொட்டி பூங்காவில் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. பால்சம், பிகோனியா, சைக்ளோமன், ரெனன்குலஸ், டேலியா, கேலண்டூலா, சால்வியா, ஜெரேனியம், கேக்டஸ் உள்பட 50 ரகங்களை சேர்ந்த மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் நர்சரியில் 40 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் கர்நாடகா அரசு பூங்காவுக்கு 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர்.
இசை நீரூற்று
இந்த நிலையில் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக 300 அடி தூரம் தொங்கு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இது தரையில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. தற்போது இசை நீரூற்று அமைக்கப்பட்டு வருகிறது.
பூங்காவில் இயற்கையாக உற்பத்தியாகும் ஊற்று தண்ணீர் 4 குட்டைகளில் சேகரமாகும் வகையில் தனித்தனியாக கட்டப்பட்டு உள்ளன. அதில் ஒரு குட்டையில் குழாய்கள், விளக்குகள் பொருத்தி 4 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது.
பின்னர் மோட்டார் பொருத்தி இயக்கினால், இரவில் வண்ண விளக்குகளுடன் இசைக்கு ஏற்ப தண்ணீர் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு சென்று நடனம் ஆடுவது போன்று காட்சி தரும்.
நவீன கருவி
தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்துவதற்காக நவீன கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதை பார்ப்பதற்காக காட்சி மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது. தொங்கு பாலம் மற்றும் இசை நீரூற்று விரைவில் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட உள்ளது.
இதற்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக குட்டைகளில் வண்ண மீன்கள், வாத்துகள் விடப்பட்டு உள்ளது. இதனை அவர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story