சிறுமியை மிரட்டி 6 மாதமாக பாலியல் பலாத்காரம்


சிறுமியை மிரட்டி 6 மாதமாக பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 11 April 2021 8:42 PM IST (Updated: 11 April 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் சிறுமியை மிரட்டி 6 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர், 

கடலூர் கே.என்.பேட்டை பகுதியை சேர்ந்தவள் 15 வயது சிறுமி. இவளது தந்தை சென்னையில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வருகிறார். தாய் கடலூரிலேயே வேலை பார்த்து வருகிறார். சிறுமி மட்டும் கே.என்.பேட்டையில் உள்ள தனது பெரியப்பாவின் பராமரிப்பில் இருந்து வருகிறாள்.

இந்த நிலையில் வீட்டிலேயே இருந்து வந்த சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் மிரட்டி, கடந்த 6 மாதங்களாக அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

4 வாலிபர்களிடம் விசாரணை 

இதுகுறித்து அவளது பெரியப்பா, சிறுமியிடம் விசாரித்தார். அப்போது அவள், கே.என்.பேட்டை சத்தியசாய் நகர் மற்றும் மலைபுதுநகர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய 2 வாலிபர்களும், கே.என்.பேட்டையை சேர்ந்த 21 வயதுடைய 2 வாலிபர்களும் சேர்ந்து கடந்த 6 மாதமாக தன்னை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறி கதறி அழுதார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெரியப்பா, கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story