உணவு தேடி இடம்பெயரும் வனவிலங்குகள்
முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சியால் உணவு தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள், மான்கள், கரடிகள், காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.
இதற்கிடையில் நிலம்பூர், முத்தங்கா, கூடலூர், முதுமலை, பந்திப்பூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் ஒவ்வொரு காலகட்டங்களில் நிலவும் காலநிலைகளுக்கு ஏற்ப காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இடம் பெயர்ந்து செல்கிறது.
தற்போது கூடலூர், முதுமலை பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் மாயாறு, பாண்டியாறு உள்பட அனைத்து நீர்நிலைகளும் வறண்டு காணப்படுகிறது. மேலும் பசுந்தீவன தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது.
இடம்பெயரும் வனவிலங்குகள்
இதைத்தொடர்ந்து முதுமலையில் இருந்து அதிகளவில் காட்டு யானைகள் வெளியேறி கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. வறட்சியான காலநிலையை போக்கும் வகையில் கோடை மழை பெய்யும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் வறட்சியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
ஏற்கனவே உணவு தட்டுப்பாட்டால் அவதிப்படும் காட்டுயானைகள் உடல்ரீதியாக மெலிந்து வருகிறது. மேலும் உணவு தேடி பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறது.
குறிப்பாக கர்நாடக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு தேடி கூடலூர், கேரள வனப்பகுதிக்கு வனவிலங்குகள் இடம்பெயர்கிறது.
பசுந்தீவன தட்டுப்பாடு
இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில் கூறியதாவது:- முதுமலையில் வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு விட்டது. இதனால் வனவிலங்குகளின் தாகத்தை தணிக்க வாகனங்களில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வனப்பகுதியில் உள்ள தரைத்தள தொட்டிகளில் ஊற்றப்பட்டு வருகிறது. ஆனால் வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் காட்டு யானைகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. இது உடல் மெலிவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். கோடை மழை பரவலாக பெய்தால் வனப்பகுதி பசுமைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் காட்டு யானைகளின் உடல்நிலை மீண்டும் முன்னேற்றம் அடைந்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story