கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து முன்னணியினர் போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து முன்னணியினர் போராட்டம்
x
தினத்தந்தி 11 April 2021 9:24 PM IST (Updated: 11 April 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

கோவை

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். 

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்

கோவை போத்தனூரை சேர்ந்தவர் ராமு என்கிற ராமகிருஷ்ணன் (வயது 36). இவர் இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் மற்றும் உக்கடம் பகுதி பொறுப்பையும் கவனித்து வந்தார். 

இந்த நிலையில் உக்கடத்தில் இருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.  

இதில் படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  

கலெக்டர் அலுவலகம் முற்றுகை 

இது குறித்து போத்தனூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதற்கிடையே, ராமகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் ஏராளமான இந்து முன்னணியின் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதையடுத்து கலெக்டர் அலுவலக மெயின் வாயில் கேட் பூட்டப்பட்டதுடன் பாதுகாப்புக்காக மத்திய அதிரடிப்படை (ஆர்.ஏ.எப்) போலீசார் குவிக்கப்பட்டனர். 

கலவரத் தடுப்பு போலீசார், மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டது.

போலீஸ் கமிஷனரிடம் முறையீடு 

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை சந்தித்து முறையிட்டனர்.

 இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா, மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், பா.ஜனதா மாவட்ட தலைவர் நந்தகுமார், ஆர்.எஸ்.எஸ் மாவட்ட தலைவர் ராஜா, விசுவ இந்து பரிஷத் செயல் தலைவர் சிவலிங்கம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

பின்னர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறும்போது, தாக்குதல் நடத்தியவர்கள் மீது இன்னும் 3 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இந்த தாக்குதலில் சதி உள்ளது என்றார். 

இந்த சம்பவத்தையடுத்து கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.   

ஆறுதல்

தாக்குதலில் காயமடைந்த ராமகிருஷ்ணனை காடேஸ்வரா சுப்பிரமணியம், பா. ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். 

பின்னர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறும்போது "பா.ஜனதா கட்சிக்காக தீவிர தேர்தல் பணியாற்றிய ராமகிருஷ்ணன் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 


Next Story