பணத்தை திரும்ப கேட்ட இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிடுவதாக மிரட்டல்
வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்ட இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிடுவதாக மிரட்டிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை
வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்ட இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிடுவதாக மிரட்டிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேலைதேடி கோவை வந்தார்
திருச்சியை சேர்ந்த 28 வயது பெண் தனது கணவரை பிரிந்து 2 வயது குழந்தையுடன் பெற்றோருடன் வசித்து வருகிறார். வேலை தேடி கோவை வந்த அவர் தோழிகளுடன் அறை எடுத்து தங்கி உள்ளார்.
அவர் வேலை தேடியபோது கோவை குறிச்சி பிள்ளையார் புரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான அஸ்ரப் அலி (40) மற்றும் காவியா ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது.
அப்போது அஸ்ரப் அலி அந்த பெண்ணிடம் ரூ.1½ லட்சம் கொடுத்தால் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி உள்ளார்.
பணத்தை திரும்ப கேட்டார்
அதை நம்பிய அந்த பெண் ரூ.1½ லட்சத்தை கொடுத்தார். பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் அஸ்ரப் அலி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து அந்த பெண் பணத்தை திரும்ப கேட்டார்.
ஆனால் பணத்தை திரும்ப கொடுப்பதாக கூறி நாட்களை கடத்தி வந்த அவர், முன்னுக்கு பின் முரணாகவும் பேசி வந்தார். இதனால் அந்த பெண்ணுக்கு அஸ்ரப் அலி மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பெண் பணத்தைத் திருப்பிக்கேட்டு கட்டாயப்படுத்தியபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அஸ்ரப் அலி பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என்று கூறினார்.
தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்தால், உனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவதாகவும் அந்த பெண்ணை மிரட்டி உள்ளார்.
போலீஸ் வலைவீச்சு
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் அஸ்ரப் அலி மீது மோசடி, மிரட்டல் உள்பட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story