கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றில் தத்தளித்த 3 மாணவர்கள் மீட்பு
கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றில் தத்தளித்த 3 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
கம்பம்:
கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றில் தத்தளித்த 3 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
முல்லைப்பெரியாறு தடுப்பணை
தேனி மாவட்டம் கம்பம் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாருகேஷ் (வயது 16). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரும், அதே தெருவை சேர்ந்த கல்லூரி மாணவரான ரூபன் (18), நெல்லுகுத்தி புளியமரத்தெருவை பிளஸ்-2 மாணவரான அரவிந்த் (17) ஆகியோரும் நேற்று கம்பம் சுருளிப்பட்டி சாலையில் உள்ள தொட்டம்மன்துறை முல்லைப்பெரியாறு தடுப்பணையில் குளிக்க சென்றனர்.
அங்கு அவர்கள் குளித்து கொண்டிருந்தபோது, திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், ஆற்றில் தண்ணீர் அதிகரித்ததால் அங்கு குளித்து கொண்டிருந்த சாருகேஷ் உள்பட 3 மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
3 பேர் தத்தளிப்பு
ஆற்றில் இருந்து வெளியே வரமுடியாமல் தண்ணீரில் சிக்கி மாணவர்கள் தவித்தனர். அதிர்ஷ்வசமாக ஆற்றின் மையப்பகுதியில் ஒரு கல்திட்டு இருந்தது. அதனை பிடித்து கொண்டு 3 பேரும் உயிர் பிழைப்பதற்காக அபயகுரல் எழுப்பினர்.
மாணவர்கள் 3 பேரும் தண்ணீரில் தத்தளிப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையம், கம்பம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
உயிருடன் மீட்பு
இதேபோல் தீயணைப்பு நிலைய அலுவலர் அழகர்சாமி தலைமையிலான தீயணைப்பு படைவீரர்களும் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் முல்லைப்பெரியாற்றில் தத்தளித்த சாருகேஷ், ரூபன், அரவிந்த் ஆகிய 3 மாணவர்களையும் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.
இதைத்தொடர்ந்து பெற்றோர்களை வரவழைத்து, அவர்களிடம் மாணவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். ஆபத்தான முறையில் ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாணவர்களுக்கு போலீசாரும், தீயணைப்பு படையினர் அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story