வால்பாறையில் எஸ்டேட் பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


வால்பாறையில் எஸ்டேட் பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 11 April 2021 10:48 PM IST (Updated: 11 April 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் எஸ்டேட் பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

வால்பாறை,

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வால்பாறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் போலீசார் உள்பட பலரும் தாங்களாகவே முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள வாட்டர்பால்ஸ் எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த மருத்துவ முகாமுக்கு வட்டார தலைமை டாக்டர் பாபுலட்சுமண் தலைமை தாங்கினார்.

 வாட்டர்பால்ஸ் எஸ்டேட் தலைமை டாக்டர் ரெனிபேவேரா முன்னிலை வகித்தார். இந்த முகாமில் ஏராளமான தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

கொரோனா தடுப்பூசி

இதுகுறித்து டாக்டர் பாபுலட்சுமண் கூறுகையில், கொரோனா தடுப்பூசி மருந்து கையிருப்பில் இருக்கும் போதே வால்பாறை பகுதி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். தற்போது கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு வருவதால் தடுப்பூசி தட்டுப்பாடு அல்லது காலதாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள். பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். அடிக்கடி கிருமிநாசினி  மூலம் கைகழுவுங்கள். 

எஸ்டேட் பகுதிகளை சேர்ந்தவர்களோ, தனியார் அமைப்பை சேர்ந்தவர்களோ, தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களோ கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்கு முன் வந்ததால் அது குறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் கொடுக்கலாம். 

சம்மந்தப்பட்ட இடங்களிலேயே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story