முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 6 ஆயிரம் பேர் மீது வழக்கு


முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 6 ஆயிரம் பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 April 2021 12:01 AM IST (Updated: 12 April 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 6 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நெல்லை, ஏப்:
நெல்லை மாவட்டத்தில் முககவசம், சமூக இடைவெளி கடைபிடிக்காத 6 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.12¼ லட்சம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அரசின் விதிமுறைகளை மீறி பொது இடங்களில் முககவசம் அணியாமல் செல்பவர்கள் மற்றும் வாகனம் ஓட்டும்போது முககவசம் அணியாமல் இருப்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

6 ஆயிரம் பேர் மீது வழக்கு

இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் நெல்லை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் சென்ற 5,920 பேர் மீதும், சமூக இடைவெளியை பின்பற்றாத 91 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சத்து 33 ஆயிரத்து 900 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறுகையில், "பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனாவில் இருந்து நம்மையும் பாதுகாத்து சமுதாயத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Next Story