கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா ரத்து


கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா ரத்து
x
தினத்தந்தி 11 April 2021 6:38 PM GMT (Updated: 11 April 2021 6:38 PM GMT)

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக இந்துசமய அறநிலையத்துறையினர் அறிவித்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள்  மட்டுமின்றி மும்பை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த திரளான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள். 
மேலும் அவர்கள் அழகி போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சித்திரை விழா இந்தாண்டு நாளை மறுநாள் (புதன்கிழமை) காப்புக்கட்டுதலுடன் தொடங்க இருந்தது.

அனுமதி கிடையாது

 இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால், அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் கோவில்களில் திருவிழாக்களை நடத்த தடை விதித்துள்ளது. 
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையினர் கூத்தாண்டவர் கோவிலில் இந்தாண்டு நடைபெற இருந்த சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். ஆனால் வழக்கம்போல் நித்தியபடி பூஜைகள் கோவிலில் நடைபெறும்.
 இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.
 இது தொடர்பான விவரங்களை கோவில் முன்பு  உள்ள  தகவல் பலகைகளில் அதிகாரிகள் எழுதி வைத்துள்ளனர். நாளை மறுநாள்  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா தொடங்க இருந்த நிலையில், விழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள், திருநங்கைகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டும் திருவிழா ரத்து செய்யப்பட்டது கூறிப்பிடத்தக்கதாகும்.

Next Story