பால் வியாபாரி படுகொலை
திண்டுக்கல் அருகே பால் வியாபாரி சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் அருகே உள்ள பாலமரத்துபட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). பால் வியாபாரி.
நேற்று இரவு இவர், மாலப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வியாபாரத்தை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள், சரமாரியாக கத்தியால் குத்தினர்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர்கள் அங்கு இருந்து தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் அங்கு மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
அது, சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இறந்த முருகேசனுக்கு பாப்பாத்தி என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர்.
இந்த கொலை சம்பவம் முன்விரோதத்தால் நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story