அரசு உத்தரவின்படி ஜி-கார்னருக்கு செல்ல மறுத்து காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பின் உடன்பாடு


அரசு உத்தரவின்படி ஜி-கார்னருக்கு செல்ல மறுத்து காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பின் உடன்பாடு
x
தினத்தந்தி 12 April 2021 1:04 AM IST (Updated: 12 April 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

அரசு உத்தரவின்படி ஜி-கார்னருக்கு செல்ல மறுத்து காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் போராட்டம் நடத்தினார்கள். பேச்சுவார்த்தைக்கு பின் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.


திருச்சி, 

அரசு உத்தரவின்படி ஜி-கார்னருக்கு செல்ல மறுத்து காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் போராட்டம் நடத்தினார்கள். பேச்சுவார்த்தைக்கு பின் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

சில்லறை வியாபாரத்துக்கு தடை

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு சென்னை கோயம்பேட்டில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட் மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள மார்க்கெட்டுகளிலும் மொத்த வியாபாரம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. சில்லறை வியாபாரத்திற்கு தடை விதித்தும் உத்தரவிட்டு உள்ளது.

இதன்படி திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லறை வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் தங்களது வியாபாரத்தை அதிகாலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரை நடத்திக்கொள்ள வேண்டும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டார். ஏப்ரல் 11-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் இது அமலுக்கு வரும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

வியாபாரிகள் போராட்டம்

ஆனால் அரசு பிறப்பித்த உத்தரவின்படி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் நேற்று சில்லறை வியாபாரிகள் கடை அமைக்க வில்லை. அதே நேரத்தில் காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் அங்கு தங்களது கடைகளை அடைத்துவிட்டு ஒரு இடத்தில் கூடினர். அவர்கள், பொன்மலை ஜி-கார்னர் பகுதிக்கு நாங்கள் செல்ல மாட்டோம். காந்தி மார்க்கெட்டில் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்று காய்கறி வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. அத்துடன் கழிவறை உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. ஆதலால் அங்கு செல்ல மாட்டோம் எனக்கூறி காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தை

அவர்கள் சில்லறை வியாபார கடைகளை மூடிவிட்டு நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் முடிவு எட்டப்படவில்லை. காந்தி மார்க்கெட்டின் பிரதான கேட் மற்றும் பக்கவாட்டில் இருந்த நான்கு நாட்களும் மூடப்பட்டன. ஒரே ஒரு கேட் மட்டும் திறந்து இருந்தது. சில்லறை காய்கறி கடைகள் மூடப்பட்டிருந்த அதே நேரத்தில் தரை கடைகளில் மட்டும் காய்கறி வியாபாரம் நடைபெற்றது. 

மேலும் பூக்கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன. அங்கு பூக்கள் வாங்க வியாபாரிகளும், மக்களும் அலைமோதின. இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சினை பற்றி திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் பவன்குமார் ரெட்டி, வேதரத்தினம் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, காந்தி மார்க்கெட் காய்கறிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் கமலக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மொத்த வியாபாரிகள்

அப்போது காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகளும் பொன்மலை ஜி-கார்னர் பகுதிக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். சில்லறை வியாபாரம், மொத்த வியாபாரம் என தனித்தனியாக பிரிக்க வேண்டாம். வியாபாரிகளுக்குள் பிரிவினையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதலால் பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் மொத்த வியாபாரிகளும் அங்கே சென்று வியாபாரம் நடத்த தயாராக இருக்கிறோம் என காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூறினார்கள்.
இதில் ஏற்பட்ட உடன்பாட்டை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) முதல் பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் காய்கறி மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் செய்வதற்கு வியாபாரிகள் விரும்பினால் அதனை யாரும் தடுக்கக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story