திருச்சி மத்திய பஸ் நிலையத்தின் அவலம்


திருச்சி மத்திய பஸ் நிலையத்தின் அவலம்
x
தினத்தந்தி 12 April 2021 1:06 AM IST (Updated: 12 April 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கழிவறை பராமரிப்பு இன்றி பூட்டிக்கிடக்கும் அவலநிலை உள்ளது.


திருச்சி மாநகரத்தை சென்னைக்கு அடுத்தபடியாக 2-வது தலைநகராக மாற்ற வேண்டும் என்பது பலரது கருத்தாக இருக்கிறது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து எந்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமானாலும் குறைந்தது 5 மணி நேரத்திற்குள் சென்று விடலாம். அந்த அளவிற்கு பஸ் வசதி உள்ளது. 

இது ஒருபுறம் இருக்க திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதி உள்ளதா? என்று கேட்டால் புருவத்தை சுருக்கி திருப்பி நம்மிடமே அதே கேள்வியை கேட்பார்கள். சொந்த ஊருக்கு செல்ல வருவோர், அலுவலகத்திற்கு சரியான நேரத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசரமாக பஸ் நிலையத்திற்கு வருபவர்கள், இரவு நேரத்தில் வெளியூரில் இருந்து வருபவர்கள், கழிப்பறை வசதி இல்லாமல் அவர்கள் படும் கஷ்டத்தை பார்த்தால் வெளியே சொல்ல முடிவதில்லை. 

கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் பஸ் நிலையத்தை சுற்றிலும் சிறுநீர் கழிப்பதால் அனைவரும் மூக்கை பிடித்தபடி பஸ் நிலையத்தில் நுழைகின்றனர். கடந்த ஆண்டு புதிதாக கட்டிய கழிப்பறை கட்டிடம் செயல்பட்டு வந்தது. அதுவும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் மூடப்பட்டது. இப்போது அந்த புதிய கழிப்பறை கட்டிடம் செயல்படாமல் உள்ளது. அந்த கட்டிடத்தில் திருச்சி மாநராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் `திறந்த வெளி கழிப்பிடம் தவிர்ப்போம்... கழிவறையை எப்போதும் உபயோகிப்போம்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதுதான் வேதனை தருகிறது. 

கழிவுநீர் தொட்டி

மற்றொரு கழிப்பறை கட்டிடம் சரியான பரா   மரிப்பு இல்லாததால் அதனை பயன்படுத்துவோர் குறிப்பாக பெண்கள் கடும் சிரமம் அடைகின்றனர். பஸ்நிலையத்தின் உள்ளே 5 இடங்களில் சாக்கடை கழிவுநீர் தொட்டி உள்ளது. அவை சரியாக மூடாததால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் பயணிகள் அதில் தவறிவிழுந்து காயம் ஏற்பட்ட சம்பவங்களும் உண்டு. 

தமிழகத்தின் முக்கிய மாநகராட்சிகளில் ஒன்றான திருச்சி இப்படி சுகாதாரமின்றி இருப்பது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்துகிறது.

Next Story