கன்னியாகுமரி கடற்கரையில் முக கவசம் அணியாதவர்களை எச்சரித்த போலீசார்
கொரோனா பரவலால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. அங்கு முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்தவர்களை போலீசார் எச்சரித்தனர்.
கன்னியாகுமரி,
கொரோனா பரவலால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. அங்கு முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்தவர்களை போலீசார் எச்சரித்தனர்.
கடற்கரையில் கட்டுப்பாடு
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலோரப் பகுதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூடும் சுற்றுலா தலங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் கட்டுப்பாடுகளுடன் கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. விடுமுறை நாளான நேற்றும் அதே நிலை நீடித்தது.
அபராதம் விதிப்பு
எனினும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி, கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சன்செட் பாயிண்ட் கடற்கரை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர்.
அதே சமயத்தில் கடற்கரையில் திரண்டவர்கள் முக கவசம் அணியாமல் சுற்றி திரிகிறார்களா? என்பதை போலீசாரும், அதிகாரிகளும் கண்காணித்தனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர். அதே சமயத்தில் கடற்கரையில் முக கவசம் அணியாமல் வந்த சுற்றி திரிந்தவர்களை போலீசார் எச்சரித்தனர். சிலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story