ஆகாய தாமரைகள் சூழ்ந்த செஞ்சை நாட்டார் கண்மாய்


ஆகாய தாமரைகள் சூழ்ந்த செஞ்சை நாட்டார் கண்மாய்
x
தினத்தந்தி 12 April 2021 1:10 AM IST (Updated: 12 April 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

ஆகாய தாமரைகள் சூழ்ந்த செஞ்சை நாட்டார் கண்மாயை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

காரைக்குடி,

படத்தை பார்த்ததும் ஏதோ கிரிக்ெகட் மைதானம் என்று நினைத்து விடாதீர்கள். ஆகாய தாமரைகள் சூழ்ந்த செஞ்சை நாட்டார் கண்மாய் தான் இது. பராமரிப்பு இல்லாததால் இப்படி கிடக்கிறது. இதை பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நெல் வாடை அடிக்கும் ஊர்

பல ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடியில் எந்த திசையிலிருந்து பார்த்தாலும் சாலைகளில் நெற்கதிர்கட்டுகள், அதனை மாடு கட்டி போரடிக்கும் காட்சிகளும், நெற்குவியல்களும் அறுவடை சம்பந்தமான விவசாய வேலைகளும் நடைபெற்ற வண்ணம் இருக்கும். ஊரே நெல் வாடை அடிக்கும். செஞ்சை, கழனிவாசல், தெற்கு தெரு போன்ற பகுதிகள் காரைக்குடியின் பூர்வீக பகுதிகளாகும்.
இப்பகுதியில் வசித்த மக்கள் விவசாயத்தையே தங்கள் முழுநேரத்தொழிலாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தனர். இங்கு எப்போதும் இரு போகம், முப்போகம் என எப்போதும் விளைச்சல் இருக்கும்..இதற்கான நீர் நிலைகள் ஏராளமாக இருந்தன. காரைக்குடி நகரம் விரிவடைந்து வளர்ந்து இன்று மாநகராட்சியாக அறிவிக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டது. இதனால் விவசாயத்தின் சிறு பகுதி கூட இன்று இல்லை.அதற்கு பதிலாக சிறு, குறு, பெரு தொழில்கள் உருவாகியுள்ளது. பெரிய வியாபார தலமாகவும் மாறிவிட்டது.

ஆக்கிரமிப்பு

இதுகுறித்து பழம்பெரும் விவசாயியும் முன்னாள் கவுன்சிலருமான சொக்கநாதன் (வயது 86) என்பவர் கூறியதாவது:-
 அந்த காலத்தில் காரைக்குடி விவசாயத்தில் சிறப்புற காரணமாக இருந்தது செஞ்சை நாட்டார் கண்மாய், காரைக்குடி நாட்டார் கண்மாய், கழனிவாசல் அதளைக்கண்மாய், குரிச்சிக்கண்மாய், நாச்சுழியேந்தல் கண்மாய் மற்றும் தென் பகுதியில் ஓடிய தேனாறு ஆகியவற்றின் நீர் ஆதாரமே. காரைக்குடியில் வட பகுதியில் பெய்யும் மழைநீர் எல்லாம் கால்வாய்கள் மூலம் கண்மாய்க்கு வந்துவிடும். நாளடைவில் கண்மாய்க்கான நீர்வரத்துக்கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போயின.இதனால் கண்மாய்க்கு நீர் வரத்து குறைந்து போய் விட்டது. இதனால் நீரே இல்லாத சில கண்மாய்களும், நீர்வரத்தே இல்லாததால் கால்வாய்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி காணாமல்போனது.
ஆகாய தாமரைகள்
காணாமல் போன கண்மாய்களால் விளைச்சல் இல்லாததால் விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறின.தற்போது ஆக்கிரமிப்பு கண்மாய் பகுதிகள் குடியிருப்புப்பகுதிகளாக மாறியுள்ளது. இதனால் விவசாயம் குறைந்து போனது.
மேலும் தற்போது இருக்கும் செஞ்சை நாட்டார் கண்மாய்க்கு கால்வாய் நீர்வரத்து இல்லாததால் மழையால் சிறிதளவு நீர் சேர்ந்தாலும் அதில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்து, கழிவுகள் கொட்டப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு காணாமல் போன கண்மாய்களையும், கால்வாய்களையும் கண்டுபிடித்து அதனை தூர்வாரி சுத்தப்படுத்தி, பாதுகாத்து விவசாயத்திற்கு பயன்படுத்த வாய்ப்பளித்தால்காரைக்குடி பகுதியில் மீண்டும் விவசாயம் செழிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
 இந்த பகுதி விவசாயிகளின் கோரிக்கையை காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன கால்வாய்களை மீட்க வேண்டும். ஆகாய தாமரைகள் சூழ்ந்த கண்மாய்களை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story