மதுரையில் ஒரே நாளில் 173 பேருக்கு கொரோனா


மதுரையில் ஒரே நாளில் 173 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 April 2021 1:18 AM IST (Updated: 12 April 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் ஒரே நாளில் 173 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

மதுரை, ஏப். 12-
மதுரையில் ஒரே நாளில் 173 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு இருந்ததை போல் தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி ஜூன், ஜூலை மாதங்களில் உச்சக்கட்டத்தை அடைந்தது. தற்போதும் தமிழகத்தில் அதே நிலை தான் தொடர்கிறது.
மதுரையை பொறுத்தமட்டில் பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்றும் ஒரே நாளில் 173 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 157 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை 22 ஆயிரத்து 986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதுபோல், நேற்று 45 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், இதுவரை 21 ஆயித்து 339 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு
மதுரையில் நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,176 ஆக உயர்ந்துள்ளது. படிப்படியாக பாதிப்பு எண்ணிக்கை உயர்வதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் வார்டுகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதுபோல் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது பெண் நேற்று உயிரிழந்தார். இதன் மூலம் மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது. 
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மதுரையில் நாளொன்றுக்கு கொரோனா பரிசோதனை 5 ஆயிரத்திற்கும் அதிகமாக நடைபெற்று வருகிறது. எனவே வரும் காலங்களிலும் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும். பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். இல்லாவிட்டால் கொரோனா நம்மை தாக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story