ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்- கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியில் பூசாரிக்கு மட்டும் அனுமதி


ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்- கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியில் பூசாரிக்கு மட்டும் அனுமதி
x
தினத்தந்தி 12 April 2021 2:46 AM IST (Updated: 12 April 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) நடக்கும் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியில் பூசாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) நடக்கும் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியில் பூசாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
திருவிழா
ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 6-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 7-ந் தேதி இரவு பெரிய மாரியம்மன் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் கம்பங்கள் நடப்பட்டன. அதைத்தொடர்ந்து பக்தர்கள் தினமும் கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி வந்தார்கள்.
கடந்த 8-ந் தேதி காலையில் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடந்தன. மேலும், திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு சென்று, கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.
மஞ்சள் நீராட்டுக்கு தடை
இந்தநிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், கோவில் திருவிழா நடத்த தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக ஈரோடு மாநகர் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) நடக்க இருந்த மஞ்சள் நீராட்டு விழாவுக்கு தடை விதித்து கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார். மேலும், நேற்று முன்தினம் மாலை 6 மணி வரை மட்டுமே கோவில்களில் நடப்பட்டு உள்ள கம்பங்களுக்கு புனிதநீர் ஊற்ற அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ஈரோடு பெரிய மாரியம்மனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் காலையிலேயே குவிந்தனர். அவர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்கள். பக்தர்கள் வரிசையாக நிற்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். கம்பத்துக்கு புனிதநீர் ஊற்ற பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம் ஆகமவிதிபடி கம்பத்தில் ஈரப்பதம் இருக்கும் வகையில், பூசாரிகள் கம்பத்துக்கு புனிதநீரும், பாலும் ஊற்றினார்கள்.
சிறப்பு அலங்காரம்
திருவிழாவையொட்டி பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பெரிய மாரியம்மன் கோவிலின் முன்பு பக்தர்கள் கூடி நிற்பதை தவிர்க்கும் வகையில், அங்கு அமைக்கப்பட்டு இருந்த பந்தல்கள் நேற்று அகற்றப்பட்டன. மேலும், பக்தர்கள் முக கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பூ, தேங்காய், பழம் போன்ற பூஜை பொருட்களை கோவிலில் பக்தர்கள் வழங்கக்கூடாது, கோவில் வளாகம் மற்றும் கோவிலின் முன்பு பக்தர்கள் கூடி நிற்கக்கூடாது போன்ற விழிப்புணர்வுகள் ஒலி பெருக்கி மூலமாக தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது. அதிக பக்தர்கள் தரிசனம் செய்ய வந்ததால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவிலின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அனுமதி கிடையாது
கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருந்த விழா அதிகாலை 5.05 மணிக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆர்.டி.ஓ. சைபுதீன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் கோவில் செயல் அதிகாரி ரமணிகாந்தன், ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் அதிகாரிகள், பூசாரிகள், பக்தர்கள் பலர் கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தில், கோவில்களின் கம்பங்களை எடுக்கும் நிகழ்ச்சியில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் இருந்து எடுக்கப்படும் கம்பங்கள் தனித்தனி சரக்கு ஆட்டோக்களில் ஏற்றி மணிக்கூண்டு பகுதிக்கு கொண்டு வரப்படும். அங்கிருந்து ஒரு லாரியில் 3 கம்பங்களும் ஏற்றப்பட்டு ஆர்.கே.வி.ரோடு, காவிரிரோடு வழியாக கருங்கல்பாளையம் காவிரிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு காவிரி ஆற்றில் விடப்படுகிறது. இதில் பூசாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனுமதி கிடையாது”, என்றனர்.

Next Story