பவானி கூடுதுறையில் அமாவாசையை முன்னிட்டு பரிகாரம் செய்ய குவிந்த பக்தர்கள்- கொரோனா தடுப்பு விதிமுறை மீறலால் கொரோனா பரவும் அபாயம்
பவானி கூடுதுறையில் அமாவாசையை முன்னிட்டு, கொரோனா தடுப்பு விதிமுறையை மீறி குவிந்த பக்தர்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பவானி
பவானி கூடுதுறையில் அமாவாசையை முன்னிட்டு, கொரோனா தடுப்பு விதிமுறையை மீறி குவிந்த பக்தர்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு விதிமுறைகள்
பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என 3 நதிகள் சங்கமிக்கும் கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக தினமும் ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
தற்போது ஈரோடு உள்பட தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பக்தர்கள் அதிக அளவில் கோவிலில் ஓரே இடத்தில் கூடுவதை தவிர்ப்பதற்காக திருவிழாக்கள் நடத்தவும், தரிசனம் செய்யவும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கூறியுள்ளது.
குவிந்த பக்தர்கள்
எனினும் இந்த விதிமுறைகளை மீறி நேற்று பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு நேற்று வந்தனர்.
பின்னர் இவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் பவானி கூடுதுறையில் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் பரிகாரம் செய்தனர். மேலும் ஏராளமானோர் ஒரே நேரத்தில் காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராடினார்கள்.
வேதனை
இதுகுறித்து பவானி பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘பவானி கூடுதுறைக்கு பரிகாரம் செய்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நாளில் ஒரே இடத்தில் குவிந்து உள்ளனர். தமிழக அரசின் அறிவுரையை சற்றும் பின்பற்றாமல் கொரோனா தடுப்பு விதிமுறையை மீறி பொதுமக்கள் பவானி கூடுதுறை வந்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதும், ஆற்றில் இறங்கி ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கானோர் புனித நீராடுவதும் தொற்றை பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தும். இதுகுறித்து கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு எந்தவித அறிவிப்பு செய்யாமலும், கண்டுகொள்ளாமலும் உள்ளது வேதனையளிக்கிறது. பவானி கூடுதுறை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள உணவகங்களிலும் மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர். எனவே கோவில் நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story