ஊராட்சிக்கோட்டை கதவணையில் தண்ணீர் வெளியேற்றம்: பாறை திட்டுகளாக காட்சியளிக்கும் காவிரி ஆறு


ஊராட்சிக்கோட்டை கதவணையில் தண்ணீர் வெளியேற்றம்: பாறை திட்டுகளாக காட்சியளிக்கும் காவிரி ஆறு
x
தினத்தந்தி 12 April 2021 3:28 AM IST (Updated: 12 April 2021 3:28 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிக்காக ஊராட்சிக்கோட்டை கதவணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி ஆறு பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது.

தேவூர்:
பராமரிப்பு பணிக்காக ஊராட்சிக்கோட்டை கதவணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி ஆறு பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது.
கதவணைகள்
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் செக்கானூர் நீர்மின்தேக்க நிலையம், நெரிஞ்சிப்பேட்டை நீர்மின்தேக்க நிலையம், கோனேரிப்பட்டி நீர் மின்தேக்க நிலையம், ஊராட்சிக்கோட்டை நீர் மின்தேக்க நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கதவணைகளில் தேக்கி வைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஏப்ரல், மே மாதங்களில் நீர்மின் தேக்க கதவணைகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டு 15 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
பாறைகளாக காட்சியளிக்கிறது
இதன்படி தேவூர் அருகே ஊராட்சிக்கோட்டை நீர்மின் தேக்க கதவணையில் அனைத்து மதகுகளும் திறந்து விடப்பட்டு, தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக நீர்த்தேக்க பகுதிகளான வேலாத்தாகோவில், ராமக்கூடல், புளியம்பட்டி பரிசல் துறை, புள்ளாக்கவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வடிந்து பாறைகளாக காட்சி அளிக்கிறது. இதனால் குறைவான தண்ணீர் உள்ள பாறை இடுக்குகளில் இருக்கும் மீன்களை சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் பிடித்து வருகின்றனர். மேலும் நீர்த்தேக்க பகுதிகளில் கடல் போல் காட்சி அளித்த காவிரி ஆறு, தற்போது பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது.

Next Story