தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு பதுக்கி கடத்த முயன்ற ரூ.3லட்சம் கஞ்சா எண்ணெய் பறிமுதல் 2பேர் கைது
தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு ரூ.3 லட்சம் கஞ்சா எண்ணையை பதுக்கி கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சா எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
தீவிர கண்காணிப்பு
தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு கஞ்சா எண்ணெய், மஞ்சள், கடல் அட்டை உள்ளிட்ட பல்வேறு தடை செய்யப்பட்ட பொருட்களும், போதைப்பொருட்களும் கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கடலோர பாதுகாப்பு படையினர், கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ரூ.20 கோடிக்கும் அதிகமான கஞ்சா, கஞ்சா எண்ணெய், சாரஸ் போன்ற போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
கஞ்சா எண்ணெய்
இந்த நிலையில் தூத்துக்குடி பகுதியில் கஞ்சா எண்ணெய் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வேலாயுதம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு பண்ணை தோட்டத்தில் கஞ்சா எண்ணெய் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக அந்த தோட்டத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தலா ஒரு லிட்டர் வீதம் மூன்று பாக்கெட்டுகளில் மொத்தம் 3 லிட்டர் கஞ்சா எண்ணெய் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மாலத்தீவுக்கு...
இதுதொடர்பாக அங்கிருந்த செங்கல்பட்டு மாவட்டம் அச்சிரப்பாக்கத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் பிரிட்டோ (வயது 37), தூத்துக்குடி பண்ணைவிளை ஈசாக்கு ஐயர் தெருவைச் சேர்ந்த விக்டர் (49) ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பிடிபட்ட பிரிட்டோ மாலத்தீவில் வேலை செய்து வருகிறார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து உள்ளார். அவர் தேனியில் இருந்து கஞ்சா எண்ணெயை மொத்தமாக வாங்கி தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள பண்ணை தோட்டத்துக்கு கொண்டு வந்தார். அங்கு வைத்து தலா ஒரு லிட்டர் கஞ்சா எண்ணெய் கொண்ட பாக்கெட்டுகளாக தயாரித்து உள்ளார். இதற்காக அங்கு பிரத்தியேக மெஷின் உள்ளிட்டவையும் வைத்து இருக்கிறார். கஞ்சா எண்ணெய் பாக்கெட்டுகளை மாலத்தீவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து பிரிட்டோ, விக்டர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 லிட்டர் கஞ்சா எண்ணெய் மற்றும் பாக்கெட் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட எந்திரம், பாலித்தீன் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அந்த கஞ்சா எண்ணெயின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் கைதான 2 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து போதைப்பொருள் பிடிபட்டு வருவது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story