கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரம்


கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 12 April 2021 7:41 PM IST (Updated: 12 April 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தனிமைப்படுத்தப்பட்ட 7 இடங்களில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது தவிர ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூரில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் என 43 மையங்களில் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் 45 வயதுக்கு மேல் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் 30 சதவீதம் பேர்(அதாவது 54 ஆயிரம் பேர்) தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மீதமுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 

கடும் நடவடிக்கை 

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியில் யாரும் செல்லாதவாறு கண்காணிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கண்காணிக்க குழுக்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் கோவிட் கேர் சென்டர் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

ஊட்டி நகராட்சி சார்பில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் காந்தல் பென்னட் மார்க்கெட் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாங்களாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அவர்கள் 28 நாட்களுக்கு பின்னர் 2-வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும். தொற்று அறிகுறி உள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


Next Story