ஓட்டலில் வாடிக்கையாளர்களை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர்
ஓட்டலில் வாடிக்கையாளர்களை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர்
கோவை
காந்திபுரத்தில் ஓட்டலுக்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கினார். இதில், பெண் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் தாக்குதல்
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. திரையரங்குகள், உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உணவகங்களில் இரவு 11 மணி வரை 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் முன்பு உள்ள ஒரு ஓட்டலில் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். இரவு 10.21 மணி அளவில் அந்த பகுதியில் காட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்து ரோந்து வந்தார்.
அவர், திடீரென்று ஓட்டலுக்குள் புகுந்து உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களை தடியால் அடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வேகமாக ஓட்டலை விட்டு வெளியே ஓடினர்.
4 பேர் காயம்
சப்-இன்ஸ்பெக்டர் முத்து சரமாரியாக அடித்ததில், சாப்பிட்டுக் கொண்டு இருந்த ஓசூரை சேர்ந்த ஜெயலட்சுமிக்கு கண் அருகே காயம் ஏற்பட்டது. மேலும் 3 பேருக்கும் கை உள்ளிட்ட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயம் அடைந்த 4 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை சப் -இன்ஸ்பெக்டர் முத்து தாக்கும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் ஓட்டல் உரிமையாளர் மோகன்ராஜ் புகார் செய்துள்ளார்.
இடமாற்றத்தால் பயனில்லை
இது குறித்து ஓட்டல் உரிமையாளர் மோகன்ராஜ் கூறும் போது "சப் -இன்ஸ்பெக்டர் முத்து விதிகளை மீறி இரவு 10-21 மணியளவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை தாக்கி உள்ளார். இது கண்டனத்துக்குரியது. இந்த சம்பவம் சாத்தான்குளத்தில் போலீசார் அத்துமீறி பயங்கரமாக நடந்துகொண்டதை நினைவூட்டுகிறது. சம்பந்தப்பட்ட சப் -இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இடமாற்றத்தால் எந்த பயனும் இல்லை என்றார்.
ஓட்டலுக்குள் புகுந்து வாடிக்கையாளர்களை சப் -இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story