கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
திருவண்ணாமலை
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
அதிகரிக்க வேண்டும்
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுகூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நோய்தடுப்பு குறித்து கலெக்டர் கேட்டறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது நோய் பரவலை கட்டுப்படுத்த 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்க அறிவுறுத்தினார்.
கண்காணிப்பு
மருத்துவமனைகள் மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மருந்துகளின் கையிருப்பு, தேவையின் அளவு குறித்தும், அங்குள்ள கழிப்பிடங்களை துய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினார்.
அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்கள், வணிகவளாகங்கள், ஓட்டல்கள், பூங்காக்கள் மற்றும் சந்தை போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருமால், சுகாதார பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, துணை இயக்குநர் அஜித்தா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவமனையில் ஆய்வு
திருவண்ணாமலையில் செங்கம் சாலையில் உள்ள பழைய மருத்துவமனையில் 70 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தினையும், அதே வளாகத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஆயுஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினையும் ஆய்வு செய்தார்.
பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான பேகோபுரம் முதல் தெருவில் நடைபெற்று வரும் காய்ச்சல் முகாமினையும் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story