திருவண்ணாமலை; 2 மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி


திருவண்ணாமலை; 2 மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 12 April 2021 4:15 PM GMT (Updated: 12 April 2021 4:15 PM GMT)

பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 2 மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 2 மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பெண் ஒருவர் தனது 2 மகன்களுடன் வந்தார். அலுவலக போர்டிகோ அருகே வந்ததும் அவர் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெய்யை தன் மீதும், தனது மகன்கள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறித்து, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர், சேத்துப்பட்டு தாலுகா பெரியார் சாலையை சேர்ந்த வள்ளியம்மாள் என்பது தெரியவந்தது. இவருடைய கணவர் வரதராஜ். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு விக்னேஷ், சண்முகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

பாலியல் தொந்தரவு

வள்ளியம்மாள் குடும்ப சூழ்நிலை காரணமாக ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு அவருடன் வேலை செய்யும் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த நபரும், அவரது உறவினரும் வள்ளியம்மாளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது.

இது குறித்து சேத்துப்பட்டு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் கலெக்டர் அலுவலகத்தில் மகன்களுடன் வந்து தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்தது தெரியவந்தது.

பின்னர் அவர் கலெக்டர் சந்தீப்நந்தூரியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். 

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story