விழுப்புரம் பகுதியில் திடீர் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
விழுப்புரம் பகுதியில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அதிகரிக்க தொடங்கியது. ஒவ்வொரு நாளும் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் மக்கள், வீடுகளை விட்டு வெளியே வருவதை பிற்பகல் நேரங்களில் தவிர்த்து வந்தனர்.
பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தற்போது ஒரு சில இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்தது.
திடீர் மழை
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று காலை 8 மணியில் இருந்து விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கோலியனூர், சாலைஅகரம், பெரும்பாக்கம், காணை, பிடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.
அதன் பின்னர் சிறிது நேரம் மழை ஓய்ந்த நிலையில் விழுப்புரத்தில் மீண்டும் காலை 9.45 மணியளவில் மிதமான மழை பெய்தது. இந்த மழை பலத்த மழையாக பெய்யக்கூடும் என்று எதிர்பார்த்த நிலையில் 15 நிமிடத்திலேயே ஓய்ந்தது. இதனால் சாலையில் மழைநீர் வழிந்தோடியது. திடீரென பெய்த இந்த மழையினால் பாதசாரிகள் நனைந்தபடி சென்றனர். வேலைக்கு சென்ற சிலர் குடைபிடித்தபடி சென்றதை காண முடிந்தது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்ததோடு மதியம் வரை குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அதன் பின்னர் மதியம் 1 மணிக்கு பிறகு வெயில் அடிக்கத்தொடங்கியது.
Related Tags :
Next Story