துப்பாக்கியுடன், தீயணைப்பு படை வீரர் உள்பட 2 கைது


துப்பாக்கியுடன், தீயணைப்பு படை வீரர் உள்பட 2 கைது
x
தினத்தந்தி 12 April 2021 10:00 PM IST (Updated: 12 April 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே துப்பாக்கியுடன் தீயணைப்பு படைவீரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சத்திரப்பட்டி:

துப்பாக்கி பறிமுதல்

கடந்த 6-ந்தேதி நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, ஒட்டன்சத்திரம் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 4 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் தேடப்பட்ட 4 பேரும், சத்திரப்பட்டியை அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்த வில்சன்குட்டிபாபு (வயது 46) என்பவரின் தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், கணேசன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று அந்த தோட்டத்துக்கு சென்று சோதனையிட்டனர். 

அப்போது தோட்டத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அது, எஸ்.பி.பி.எல். ரக துப்பாக்கி ஆகும்.

 2 பேர் கைது 

இதுதொடர்பாக வில்சன்குட்டிபாபுவிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக போலீசாரிடம் கூறினார். துப்பாக்கிக்கான உரிமம் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னமயில் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அங்கு இருந்த வில்சன்குட்டிபாபு மற்றும் அவருடைய நண்பரான திருப்பூரை சேர்ந்த முருகேசன் (48) ஆகியோரை கைது செய்தனர்.

இதற்கிடையே விசாரணைக்காக அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தபோது, நெஞ்சுவலிப்பதாக வில்சன்குட்டிபாபு தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தீயணைப்பு படைவீரர்

கைது செய்யப்பட்ட வில்சன்குட்டிபாபு, ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு படை வீரராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர் வைத்திருந்த துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, போலீஸ் துணை சூப்பிரண்டு ஒருவருக்கு சொந்தமானது ஆகும். திண்டுக்கல்லில் பணிபுரிந்த அந்த அதிகாரி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். அந்த போலீஸ் அதிகாரி, வில்சன்குட்டிபாபுவுக்கு நெருங்கிய உறவினர் ஆவார்.

 அவருடைய துப்பாக்கியை தான் வில்சன்குட்டிபாபு வைத்திருந்தார். முறைப்படி துப்பாக்கியை அவர் அரசிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும். ஆனால் துப்பாக்கியை ஒப்படைக்காமல், வில்சன்குட்டிபாபு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

துப்பாக்கியுடன் தீயணைப்பு படைவீரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story