மீன்பிடி திருவிழாவில் திரண்ட கிராம மக்கள்


மீன்பிடி திருவிழாவில் திரண்ட கிராம மக்கள்
x
தினத்தந்தி 12 April 2021 10:29 PM IST (Updated: 12 April 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

கொட்டாம்பட்டி அருகே நடைபெற்ற மீன் பிடி திருவிழாவில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகத்துடன் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே நடைபெற்ற மீன் பிடி திருவிழாவில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகத்துடன் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
மீன்பிடி திருவிழா கொட்டாம்பட்டி அருகே உள்ள குன்னாரம்பட்டியில் பாரம்பரியம் மிக்க மீன் பிடி திருவிழா நடைபெற்றது. அங்குள்ள ராஜனேரி கண்மாய் 10 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையால் நிரம்பியது. தற்போது கோடை காலம் தொடங்கி தண்ணீர் வற்றிய நிலையில் கண்மாயில் நீண்ட வருடங்களுக்கு பிறகு நேற்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.

அதிகாலையில் கிராம முக்கியஸ்தர்கள் சாமி கும்பிட்டு வெள்ளை துண்டுகளை அசைத்து திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து கண்மாய் கரையில் தயாராக நின்ற ஏராளமான பொதுமக்கள் வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்களை பிடிக்க கண்மாய்க்குள் இறங்கினர்.

மீன்கள் சிக்கின

இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்கள் சிக்கின. அவற்றை பொதுமக்கள் உற்சாகமாக பிடித்து மகிழ்ந்தனர்.

இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து இறைவனுக்கு படைத்து உண்ணுவார்கள்.
இது போன்று பாரம்பரியம் மிக்க மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Next Story