வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரேநாளில் 3,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.


வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரேநாளில் 3,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
x
தினத்தந்தி 12 April 2021 10:59 PM IST (Updated: 12 April 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரேநாளில் 3,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

வேலூர்

கொரோனா தடுப்பூசி முகாம்

வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வேலூர் சத்துவாச்சாரி தஞ்சம்மாள் திருமண மண்டபத்தில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், மாநகராட்சி நலஅலுவலர் சித்ரசேனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி கொரோனா தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், வணிகர்சங்கத்தினர், காய்கறி வியாபாரிகள், தங்கும் விடுதி பணியாளர்கள், ஓட்டல் ஊழியர்கள் என்று பொதுமக்கள் தொடர்பில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 
அந்த வகையில் பஸ், லாரி, ஆட்டோ, தனியார் பள்ளி வாகன டிரைவர்கள், டிரைவிங் பயிற்சி பள்ளி ஊழியர்கள், கிளீனர்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு வருகிற 18-ந் தேதி வரை வேலூர், காட்பாடியில் 6 இடங்களில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில், அனைவரும் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

3,300 பேருக்கு தடுப்பூசி

இதேபோன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலூர் மாவட்ட கிளை அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தேசிய, தனியார் வங்கிகளில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட 325 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இந்த முகாம்களில், முன்னோடி வங்கி மேலாளர் ஜான் தியோடஸ்சியஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலூர் மண்டல முதன்மை மேலாளர் குமார், மண்டல மேலாளர் சேது முருகதுரை, கிளை மேலாளர் பாலமுரளி, வேலூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், கருணாநிதி, ராஜேஷ் கண்ணா, வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் 20 இடங்களில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதைத்தவிர 10 நகர்புற சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி 30 இடங்களில் நேற்று ஒரேநாளில் 3,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story