மரம் வளர்க்க ஓய்வூதியத்தை செலவு செய்யும் ராணுவ வீரர்


மரம் வளர்க்க ஓய்வூதியத்தை செலவு செய்யும் ராணுவ வீரர்
x
தினத்தந்தி 12 April 2021 11:17 PM IST (Updated: 12 April 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

மரம் வளர்க்க தனது ஓய்வூதியத்தை செலவு செய்து வரும் மன்னார்குடியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் நாட்டை நேசிப்பவர்கள் காட்டை வளர்க்கலாம் என கூறுகிறார்.

மன்னார்குடி;
மரம் வளர்க்க தனது ஓய்வூதியத்தை செலவு செய்து வரும் மன்னார்குடியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் நாட்டை நேசிப்பவர்கள் காட்டை வளர்க்கலாம் என கூறுகிறார்.
ராணுவ வீரர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் கைலாசம். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 
இவருக்கு இரு மகள்கள். தனது மகள்களுக்கு திருமணம் ஆன நிலையில் மனைவியுடன் வசித்து வரும் கைலாசம், ராணுவத்தில் பணியாற்றிய போதே நாட்டின் மீது மட்டுமல்லாது, காட்டின் மீதும்(மரங்கள் மீது) அளவற்ற பற்று கொண்டவராக இருந்துள்ளார். தனது பணிக்காலத்தில் தான் பணிபுரிந்த பல மாநிலங்களிலும் கைலாசம், நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்துள்ளார்.
மரக்கன்றுகளை நட்டு வருகிறார்
ஓய்வுக்கு பின்னர் தனது சொந்த ஊரான மன்னார்குடிக்கு திரும்பிய கைலாசம், மன்னார்குடி பகுதியிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். இவர் தனது வீட்டருகே உள்ள பகுதியில் மரக்கன்றுகளை உருவாக்கி பராமரித்து அதனை தேவைப்படும் இடங்களில் நடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 
பசுமை கரங்கள் எனும் பெயரில் இயற்கை ஆர்வலர்களை கொண்ட அமைப்பை உருவாக்கி அதன் மூலம் கோடை காலங்களிலும், கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களிலும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வருகிறார். 
பள்ளி, கல்லூரிகள், சாலை ஓரங்கள், ஆறு, குளம், ஏரிக்கரை, இயற்கை ஆர்வலர்களின் இல்லங்கள், கோவில்கள் என நகரின் பல பகுதிகளிலும் நிழல் தரும் பல வகையான மரக்கன்றுகளை நாள்தோறும் நட்டு வருகிறார், கைலாசம்.
காட்டை வளர்க்கலாம்
மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி, ஆர்.பி.சிவம் நகர், மன்னார்குடி மகளிர் போலீஸ் நிலையம், மன்னை நகர் என மன்னார்குடி மட்டுமின்றி அருகில் உள்ள புஷ்பவனம் கிராமத்திலும் குறுங்காடுகளை அமைத்து சிறந்த முறையில் பராமரித்து வரும் அவர், நாட்டை நேசிப்பவர்கள், காட்டை வளர்க்கலாம் என்கிறார். 
மரங்களை நடுவதோடு இவர் தனது பணி முடிந்து விட்டது என்று நின்று விடுவதில்லை. எந்த இடத்திற்கும் இழுத்துச்செல்லும் வகையில் சிறிய தண்ணீர் வண்டி ஒன்றை தயார் செய்து அதில் தண்ணீர் நிரப்பி நாள்தோறும் குறிப்பாக கோடைகாலங்களில் நீரின்றி வாடும் மரக்கன்றுகளை தேடிச்சென்று நீர் ஊற்றுவதையும் தனது தலையாய கடமையாகவும் செய்து வருகிறார் கைலாசம்.
35 ஆயிரம் மரக்கன்றுகள்
இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளதாகவும், புதிய வனங்களை உருவாக்க தன்னிடம் மேலும் 30 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கைலாசம் தெரிவித்தார். 
மன்னார்குடி பெரிய கடை தெரு பகுதியில் சாலை ஓரங்களில் மரம் வளர்க்க இவர் முயன்றபோது, நகராட்சி நிர்வாகம் அதற்கு முதலில் அனுமதி மறுத்தது. ஆனாலும் தனது முயற்சியை கைவிடாத அவர், மரம் வளர்ப்பதன் தேவையை அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறி உரிய அனுமதி பெற்று மரக்கன்றுகள் நட்டு, ஒரு மரக்கன்றுக்கு ரூ.1,000் வரையில் செலவு செய்து பராமரித்து வருகிறார்.
ஓய்வூதிய தொகையை
கடந்த ஒரு ஆண்டாக கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் சரியாக செயல்படாததால் அவர் நட்டு வைத்த பல கன்றுகள் கவனிப்பாரற்று அழிந்து விட்டன. இதனால் கவலைகொண்ட கைலாசம், தற்போது பள்ளி, கல்லூரி வளாகங்களில் குறுங்காடுகளை அமைக்க தொடங்கி உள்ளார்.
தனக்கு கிடைக்கும் ஓய்வூதிய தொகையை மரம் வளர்க்க செலவு செய்து, இயற்கை ஆர்வலர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். அதிகாலை 3 மணிக்கெல்லாம் இவருடைய மரம் பராமரிப்பு பணி தொடங்கி விடுகிறது. 
இதுகுறித்து கைலாசம் ‘தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
பொதுமக்கள் ஒத்துழைப்பு
வளர்ந்து வரும் தொழில்நுட்பம், வாகன பெருக்கம் போன்றவற்றால் பிராண வாயுவின் அளவு குறைந்து வருகிறது. எனவே தூய்மையான காற்றை இயற்கை முறையில் உற்பத்தி செய்வதற்கு மிக சிறந்த வழி மரங்களை வளர்த்து காடுகளை உருவாக்குவதே. 
கடந்த 50 ஆண்டுகளில் நாம் பாதுகாக்காமல் மாசுபடுத்திய காற்றை சுத்தம் செய்யவும், மரங்களை விரைவாக வளர்க்கவும், குறுங்காடுகள் உதவும். மரங்களை பாதுகாப்பது குறித்த அக்கறையும், விழிப்புணர்வும் மக்கள் மனதில் வேரூன்ற வேண்டும். எனவே பொதுமக்கள் ஒத்துழைத்தால் நாட்டுக்குள், காட்டை உருவாக்குவது எளிது. 
பாதுகாக்க தயார்
மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான காலியாக உள்ள இடங்களில் நகராட்சி நிர்வாகம் வேலி அமைத்து தண்ணீர் வசதி செய்து கொடுத்தால் மரக்கன்றுகளை இலவசமாக நட்டு வைத்து அவற்றை பாதுகாக்க தயாராக இருக்கிறேன். குறுங்காடுகளை உருவாக்க மேலும் 30 ஆயிரம் மரக்கன்றுகளை நட இருக்கிறேன். 
இவ்வாறு அவர் கூறினார். 
சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக பணியாற்றி விட்டு தற்போது தனது சொந்த மண்ணை பாதுகாக்க மேற்கொண்டு வரும் கைலாசத்தின் அளப்பரிய பணிக்கு நாம் அனைவரும் நிச்சயம் பாராட்டு தெரிவித்தே ஆக வேண்டும்.   

Next Story