குளித்தலையில் அடைக்கப்பட்ட ரெயில்வேகேட் சாலை நீதிமன்ற உத்தரவின்படி 4 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு


குளித்தலையில் அடைக்கப்பட்ட ரெயில்வேகேட் சாலை நீதிமன்ற உத்தரவின்படி 4 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு
x
தினத்தந்தி 12 April 2021 11:36 PM IST (Updated: 12 April 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் அடைக்கப்பட்ட ரெயில்வேகேட் சாலை நீதிமன்ற உத்தரவின்படி 4 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

குளித்தலை
நீதிமன்றத்தில் வழக்கு
கரூர் மாவட்டம் குளித்தலை தெற்கு மடவாளர் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். ஓய்வு பெற்ற வட்டாட்சியரான இவருக்கு குளித்தலை உழவர் சந்தை - மணப்பாறை ரெயில்வே கேட் வரை செல்லும் சாலையின் நடுவில் 236 அடி நீளமும் 36 அடி அகலமும் கொண்ட இடம் சொந்தமாக இருந்தது. தன்னிடம் எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் விவசாயம் செய்யும் தனது இடத்தில் குளித்தலை நகராட்சி நிர்வாகம் சாலை அமைத்து விட்டதாக பல வருடங்களுக்கு முன்பு இவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இறுதியாக இவருக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
இந்தநிலையில் தனது இடத்தை தன்னிடம் ஒப்படைக்க காலதாமதம் ஏற்படுவதாகவும் விரைவில் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீனிவாசன் மனுதாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற கிளையின் வழிகாட்டுதலின் பேரில் குளித்தலை மாவட்ட உரிமையில் நீதிபதியால் சீனிவாசனுக்கு சொந்தமான விவசாய நிலத்தை எடுத்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி கடந்த 24.10.2016-ல் நீதிமன்ற ஊழியர் மூலம் சீனிவாசனுக்கு சொந்தமான விவசாய நிலம் சுவாதீனம் எடுத்து கொடுக்கப்பட்டு சாலையின் இரண்டு புறமும் கல் ஊன்றி வேலி அமைக்கப்பட்டது. 
சாலையின் நடுவே வேலி
இந்த சாலை குளித்தலை நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இந்த சாலையின் நடுவில் வேலி அமைக்கப்பட்டதால் இச்சாலையின் அடைக்கப்பட்ட பகுதியின் உரிமையாளருக்கு உரிய தொகை வழங்கி இச்சாலையை திறக்கக்கோரி சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. குளித்தலை நகராட்சி சார்பில் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளாக இச்சாலை அடைக்கப்பட்டதால் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. 
இந்தநிலையில் இப்பிரச்சினை தொடர்பாக நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அடைக்கப்பட்ட புறவழிச்சாலை பகுதியை ஏற்கனவே அடைக்கப்படாமல் இருந்த காலத்தில் எவ்வாறு பயன்படுத்தி வந்தார்களோ அதேபோலவே பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஆணை கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
தர்ணா போராட்டம்
இதையடுத்து இச்சாலையை திறப்பதற்காக குளித்தலை நகராட்சி ஆணையர் முத்துக்குமார் அறிவுறுத்தலின் பேரில் நகராட்சி அதிகாரிகள் இச்சாலை திறக்க போலீஸ் பாதுகாப்பு கேட்டுவந்தனர். இருப்பினும் இந்த சாலை திறக்க காலதாமதம் ஏற்பட்டது. இதற்கான காரணம் தெரியாதநிலை இருந்துவந்தது. இதனால் இந்த சாலையை திறக்க வலியுறுத்தி குளித்தலை பகுதி சமூக ஆர்வலர்கள், சில அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் கடந்த மார்ச் 25-ந்தேதி தர்ணா போராட்டமும் மற்றும் கடந்த 9-ந்தேதி காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். 
சாலை திறப்பு
இந்த போராட்டம் காரணமாக நடந்த பேச்சுவார்த்தையில் இச்சாலை திறக்க பாதுகாப்புகேட்டு குளித்தலை போலீசாருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நேற்று இச்சாலை திறக்கப்படுமென நகராட்சி ஆணையர் பொறுப்பு ராதா அன்று தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று அவரின் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்புடன் அடைக்கப்பட்ட இந்த சாலையில் போடப்பட்டிருந்த கம்பி வேலி அகற்றப்பட்டு, இதில் வளர்ந்திருந்த செடிகொடிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இச்சாலை கொண்டு வரப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story