தேர்தல் முடிந்து ஒரு வாரமாகியும் தபால் வாக்குச்சீட்டு கிடைக்காத பணியாளர்கள்
தேர்தல் முடிந்து ஒருவாரமாகியும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு இன்னும் தபால் வாக்குச்சீட்டு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெமிலி
கூடுதல் பணியாளர்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. தேர்தல் பணியில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் வெவ்வேறு பகுதிகளில் தேர்தல் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், தங்கள் ஓட்டு உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று வாக்களிக்க முடியாது என்பதால் தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை பதிவு செய்வது வழக்கமான ஒன்று.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது கொரோனா நோய் தொற்றின் காரணமாக வாக்காளர்களுக்கு முககவசம், கையுறை மற்றும் கிரிமி நாசினி ஆகியவற்றை வழங்கவும், சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களிக்கவும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஊரக வளர்ச்சி துறையிலிருந்து துப்புரவு பணியாளர்கள் ஆகியோரை கூடுதலாக தேர்தல் ஆணையம் பணியமர்த்தி இருந்தது.
தபால் வாக்குச்சீட்டு கிடைக்கவில்லை
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இவர்களும் தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகியும் இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தபால் வாக்கு சீட்டுகள் வழங்கப்படவில்லை என்றும், ஒரு சிலருக்கு மட்டுமே அஞ்சல் துறையின் மூலமாக தபால் வாக்கு சீட்டுகள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தபால் வாக்குச்சீட்டு கிடைக்காதவர்கள், தங்கள் வாக்கினை முறையாக செலுத்த யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரியாமல் ஒரு சிலரும், வாக்குச்சீட்டு கிடைக்கப்பெற்றும் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் ஒரு சிலர் அதற்கான நடைமுறைகள் என்ன என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
எனவே தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தபட்டவர்களிடமிருந்து தபால் வாங்குகளை சேகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story