கோவில் திருவிழாக்களில் நாடகம் நடத்த அனுமதிக்ககோரி நாடக நடிகர் சங்கத்தினர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கோவில் திருவிழாக்களில் நாடகம் நடத்த அனுமதிக்ககோரி நாடக நடிகர் சங்கத்தினர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கரூர்
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதி முறை நடைமுறையில் உள்ளதால் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற வில்லை.
இதனால் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருபவர்கள் அங்கு வைக்கப்பட்டு உள்ள புகார் பெட்டியில் தங்களது குறைகள் அடங்கிய மனுக்களை போடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.
வாழ்வாதாரம் பாதிப்பு
கரூர் நாடக நடிகர் சங்க செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நாடக நடிகர் சங்கத்தினர் புகார் பெட்டியில் கோரிக்கை மனு ஒன்றை போட்டனர். அந்த மனுவில், கரூர் மாவட்டத்தில் நாடக நடிகர் சங்கத்தில் 475 உறுப்பினர்கள் உள்ளோம். மேலும் நாடக தொழிலை நம்பி நாங்களும், எங்களது குடும்பங்களும் வாழ்ந்து வருகிறோம். தற்போது கொரோனா பரவல் காரணமாக எங்களது நாடக தொழிலை கடந்த 2020-ம் ஆண்டு முதல் இன்றுவரை வரை நடத்த முடிய வில்லை. அதனால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு சாப்பாட்டிற்கே வழியில்லாமல் வாழ்ந்து கொண்டு வருகிறோம்.
இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கோவில் திருவிழாக்களில் நாடகம் நடத்துவதற்கு அரசு விதித்துள்ள விதிகளில் கொஞ்சம் தளர்வு கொடுத்து, அரசு ஆணையும் அனுமதியும் வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு கடன் நிதி உதவி கிடைக்க செய்ய வேண்டும். அரசு விதிகளின்படி தனிநபர் இடைவெளி கடைபிடித்து, எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடத்தி கொள்வோம். என அதில் கூறப்பட்டுள்ளது.
கிராம கோவில் பூசாரிகள்
கரூர் கிராம கோவில் பூசாரிகள் சார்பில் போடப்பட்ட மனுவில், கோவிலுக்கு தானமாக வரும் பசுமாடு ஒன்றை எங்களுக்கு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் பசுமாட்டினை நல்ல முறையில் பராமரிப்பு செய்து வருகிறோம். மேலும் கோவில் அபிஷேகத்திற்கு தேவையான பால், விபூதி மற்றும் கோமியம் போன்றவற்றை கோவிலின் பூஜைக்கு பயன்படுத்துவோம். எங்களுக்கு வழங்கப்படும் பசுமாட்டை விற்பனை செய்ய மாட்டோம். இந்து சமய அறநிலையத்துறையின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்போம். என அதில் கூறப்பட்டுள்ளது.
நாட்டுப்புற கலைஞர்கள்
கரூர் மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற அனைத்து கலைஞர்கள் சார்பில் போட்ட மனுவில், மாவட்டத்தில் உள்ள நாடக கலைஞர்கள், நாட்டுப்புற மேடைகலைஞர்கள், கிராமிய கரகாட்ட கலைஞர்கள், ஒயிலாட்ட கலைஞர்கள், தேவராட்டம் கலைஞர்கள், தப்பாட்ட கலைஞர்கள், பேண்டு வாத்திய கலைஞர்கள், கிராமிய நையாண்டி மேளகலைஞர்கள், ஒலி, ஒளி அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள ஊரடங்கில் இருந்து தளர்வு செய்ய வேண்டும்.
கோவில் திருவிழாக்கள் நடத்துவதற்க்கும், இரவு நேரத்தில் குறிப்பிட்ட நிபந்தனையோடு கலைநிகழ்ச்சிகள் நடத்தி எங்கள் குடும்பங்கள் வாழ்வதற்கு உதவ வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story