கிருஷ்ணராயபுரத்தில் பஸ்கள் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் சாலை மறியல்
கிருஷ்ணராயபுரத்தில் பஸ்கள் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம்
நிற்காமல் சென்ற பஸ்கள்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், கோவக்குளம், பிச்சம்பட்டி, மகாதானபுரம், சேங்கல், முனையனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் பொதுமக்கள் தினம்தோறும் கரூருக்கு தான் ஏற்றுமதி மற்றும் கட்டுமான பணிகளுக்கு வேலை நிமித்தமாக பஸ்சிகளில் சென்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு பொதுமக்கள் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக கிருஷ்ணராயபுரம் பஸ் நிலையத்தில் வந்து நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கரூர் சென்ற எந்த பஸ்களும் கிருஷ்ணராயபுரம் பஸ் நிலையத்தில் நிற்காமல் சென்று கொண்டிருந்தது.
சாலைமறியல்
அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்த ஒரு பஸ்சை மறித்து அதன் டிரைவர், நடத்துனரிடம் ஏன் இங்கு நிற்காமல் செல்கிறீர்கள் என பொதுமக்கள் கேட்டனர். அதற்கு பஸ்களில் நின்று செல்ல பொதுமக்களுக்கு அனுதியில்லை. குளித்தலை பகுதியிலேயே இருக்கைகள் நிரம்பி விடுகின்றன. இதனால் நிற்காமல் செல்கிறோம் என டிரைவர், நடத்துனர் கூறினர்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கிருஷ்ணராயபுரத்தில் உள்ள கரூர்-திருச்சி மெயின் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார், போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இனிமேல் காலை 7 மணி முதல் 9 மணி வரை கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் மாற்று பஸ் மூலம் கரூருக்கு புறப்பட்டு சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story