உப்பிலியபுரம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் சென்று அக்காளை அடித்த புரோட்டா மாஸ்டர் கைது
திருச்சி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் சென்று அக்காளை அடித்து துன்புறுத்திய புரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
உப்பிலியபுரம்,
திருச்சி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் சென்று அக்காளை அடித்து துன்புறுத்திய புரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
புரோட்டா மாஸ்டர்
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் செல்வராசு (வயது 53). இவருடைய 2-வது மனைவி வெண்ணிலா (44). செல்வராசுவின் முதல் மனைவியின் மகள் தேவிகா (21). வெண்ணிலாவின் தம்பியான ராமஜெயமும் (42), தேவிகாவும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
ராமஜெயம் தற்போது கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். திருமணம் முடிந்ததில் இருந்தே தனது அக்காளிடம், பெரம்பலூர் மாவட்டம் அரணாரையிலுள்ள தங்களது வீட்டின் பத்திரத்தை கேட்டு ராமஜெயம் தொந்தரவு செய்து வந்தார். ஆனால் வெண்ணிலா பத்திரத்தை கொடுக்கவில்லை.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில்...
இந்தநிலையில், நேற்று காலை மோட்டார் சைக்கிளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் தனது அக்காள் வீட்டுக்கு ராமஜெயம் சென்றார். அங்கு வீட்டின் பத்திரத்தை கேட்டு தனது அக்காளை அவர் அடித்துள்ளார். இதனால் வெண்ணிலா வலி தாங்காமல் சத்தம் போட்டுள்ளார்.
சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமஜெயத்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில், நீண்டநாட்களாக வீட்டு பத்திரத்ைத கேட்டும் தராததால் போலீஸ் வேடத்தில் சென்று அடித்து, மிரட்டினால், பத்திரத்தை வாங்கி விடலாம் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் சென்று அக்காளை அடித்து மிரட்டியது தெரியவந்தது.
இது குறித்து வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் போல் நடித்து மோசடி, களங்கப்படுத்துதல், துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ராமஜெயம் மீது உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story