உர விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் போலீசாருடன் தள்ளு, முள்ளு


உர விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் போலீசாருடன் தள்ளு, முள்ளு
x
தினத்தந்தி 13 April 2021 1:53 AM IST (Updated: 13 April 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

உர விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

உர விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் முற்றுகை

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை திருச்சி மாவட்ட அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் என்னவென்று விசாரித்தார்.

அப்போது விவசாயிகள் தரப்பில், கலெக்டரை நேரில் சந்தித்து விவசாயிகளின் நிலை குறித்தும், உரம் விலை கடுமையாக உயர்ந்திருப்பது குறித்தும் எடுத்துரைக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், கோரிக்கை மனு வைத்திருந்தால் முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டும் சென்று முறையிடலாம் என்றும், கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் அனைவரையும் அனுமதிக்க முடியாது என்றனர்.

முற்றுகை போராட்டம்

அதை ஏற்க மறுத்த விவசாயிகள் கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயில் முன்பு ரோட்டில் அமர்ந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மத்திய அரசு உயர்த்தியுள்ள 58 சதவீதம் உரம் விலையை கண்டித்தும், விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு உரிய விலையை வழங்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வேளையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக உதவி இயக்குனர் காரை, அதன் டிரைவர் ஓட்டி வந்தார். அந்த கார் முன்பு மாவட்ட தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் சிலர் படுத்தவாறு மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

தள்ளு-முள்ளு

அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு போலீசார் ஏற்படுத்தி இருந்த இரும்பு தடுப்புகளை தள்ளிக்கொண்டு விவசாயிகள் முன்னேற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தள்ளு முள்ளு சம்பவத்தின் இடையே அய்யாக்கண்ணு கூறியதாவது:-

2 மடங்கு விலை உயர்வு

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இரு மடங்கு லாபம் தருவோம் என்று அரசு சொன்னது. ஆனால் தரவில்லை. அதே வேளையில் உர மூட்டை விலையை இருமடங்கு உயர்த்தி விட்டது. ரூ.1,200-க்கு விற்ற உரமூட்டை இன்று கடையில் ரூ.2,400-க்கு விற்கிறார்கள்.
அதேபோல விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என்றார்கள். ஆனால் பாதி நேரம்தான் மின்சாரம் இருக்கிறது. எங்களை வாழ விடு... அல்லது சாகவிடு என்ற நிலைப்பாட்டுக்கு வந்து விட்டோம். காவல் துறையை வைத்து எங்களை கொடுமை படுத்தக்கூடாது என்பதற்குத்தான் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களை போராட டெல்லிக்கும் போகவிடாமல் தடுக்கிறார்கள். எங்களை கைது செய்து ஜெயிலில் போடுங்கள் என்கிறோம். போலீசார் மறுக்கிறார்கள் என்றார்.

ஒப்பாரி

அதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் மீண்டும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் பவன் குமார்ரெட்டி, விவசாயிகளிடம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வருமாறு பேச்சு வார்த்தை நடத்தினர். அதை ஏற்று மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் மனு அளித்தனர். அதன் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story