கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி கோரி நெல்லையில் நாட்டுப்புற கலைஞர்கள் மேளதாளம் முழங்க போராட்டம்


கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி கோரி  நெல்லையில் நாட்டுப்புற கலைஞர்கள் மேளதாளம் முழங்க போராட்டம்
x
தினத்தந்தி 12 April 2021 8:33 PM GMT (Updated: 12 April 2021 8:33 PM GMT)

கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி கோரி நெல்லையில் நாட்டுப்புற கலைஞர்கள் மேளதாளம் முழங்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:
கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி கோரி நெல்லையில் நாட்டுப்புற கலைஞர்கள் மேளதாளம் முழங்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டுப்புற கலைஞர்கள்

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படவில்லை. இதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த புகார் பெட்டியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போட்டு சென்றனர்.

இந்த நிலையில் தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றம், அனைத்து கிராமிய இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் பிரபாகரன், செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட கணியான்கூத்து, மகுடம் ஆட்டம் கலைஞர்கள் தொழிலாளர் நலச்சங்க தலைவர் மணிகண்டன், துணைத்தலைவர் சங்கரபாண்டி, செயலாளர் மாரியப்பன் மற்றும் நையாண்டி மேளக்கலைஞர்கள், கரகாட்டக்காரர்கள், வில்லிசை கலைஞர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து, மேளதாளம் முழங்க, கரகாட்டம் உள்ளிட்ட கிராமப்புற கலைநிகழ்ச்சிகளை நடத்தி முற்றுகையிட்டனர்.

பின்னர் நாட்டுப்புற கலைஞர்களில் சிலர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வாழ்வாதாரம் பாதிப்பு

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுப்பதாக கூறி, கோவில் திருவிழாக்களுக்கு கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கிராமப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த தொழிலை நம்பி ஏராளமான கலைஞர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறவில்லை. இதனால் கிராமப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

அனுமதிக்க வேண்டும்

இந்த ஆண்டும் திருவிழா காலங்களில் மீண்டும் கோவிலில் திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதிகளவில் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தி கிராமப்புற கோவில்களில் திருவிழா நடத்தவும், கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Next Story