கடும் வெப்பம் எதிரொலி நாமக்கல் பண்ணைகளில் 15 லட்சம் கோழிகள் சாவு
கடும் வெப்பம் எதிரொலி நாமக்கல் பண்ணைகளில் 15 லட்சம் கோழிகள் சாவு
நாமக்கல்:
கடும் வெப்பம் எதிரொலியாக நாமக்கல் பண்ணைகளில் 15 லட்சம் கோழிகள் இறந்து விட்டன.
விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 445 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 15 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக உயர்ந்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-495, ஐதராபாத்-425, விஜயவாடா-431, மைசூரூ-481, மும்பை-476, பெங்களூரு-475, கொல்கத்தா-485, டெல்லி-413.
முட்டைக்கோழி கிலோ ரூ.75-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.123-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
15 லட்சம் கோழிகள் சாவு
முட்டை விலை உயர்வு குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:- கடந்த 2 வாரங்களாக நாமக்கல் பகுதியில் 105 டிகிரி வரை வெப்பம் நிலவியது. இந்த வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல் சுமார் 15 லட்சம் கோழிகள் இறந்து விட்டன. இதேபோல் வெப்பம் காரணமாக கோழிகள் எடுக்கும் தீவனத்தின் அளவும் குறைந்து விட்டது.
இதன் காரணமாக பண்ணைகளில் சுமார் 1 கோடி வரை முட்டை உற்பத்தி குறைந்து விட்டது. மேலும் கோழித்தீவன மூலப்பொருளான சோயா புண்ணாக்கு ஒரு கிலோ ரூ.35-ல் இருந்து ரூ.65 ஆக உயர்ந்து விட்டது. இதனால் புதிய குஞ்சுகளை விடுவதும் பண்ணைகளில் குறைந்து விட்டது. இதுவே முட்டை விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ஆகும். மத்திய அரசு சோயா புண்ணாக்கை இறக்குமதி செய்தால் மட்டுமே கோழிப்பண்ணை தொழிலை நடத்த முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
========
Related Tags :
Next Story