சத்தி அருகே கொரோனாவுக்கு வியாபாரி பலி; கொடுமுடியில் போலீஸ்காரர் உள்பட 3 பேருக்கு தொற்று
சத்தியமங்கலம் அருகே கொரோனாவுக்கு வியாபாரி பரிதாபமாக இறந்தார். கொடுமுடியில் போலீஸ்காரர் உள்பட 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே கொரோனாவுக்கு வியாபாரி பரிதாபமாக இறந்தார். கொடுமுடியில் போலீஸ்காரர் உள்பட 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
வியாபாரி சாவு
சத்தியமங்கலம் அருகே உள்ள குண்டி பொம்மன் ஊரை சேர்ந்த 60 வயதுடைய மாட்டு வியாபாரி ஒருவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அங்கிருந்து கொரோனா பரிசோதனைக்காக அவரை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார்.
அவரது குடும்பத்தினருக்கும்...
இதற்கிடையே வியாபாரியின் தம்பி, தம்பியின் மனைவி, மகள் ஆகியோர் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் வியாபாரி கொரோனாவால் இறந்ததை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் நேற்று காலை பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு பரிசோதித்ததில் 3 பேருக்கும் கொரோனா இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வங்கி மேலாளர்
சத்தியமங்கலம் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மேலாளருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படடது. இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலாளாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததும், அந்த வங்கி மூடப்பட்டது. மேலும் வங்கி ஊழியர்கள் மற்றும் மேலாளர் குடியிருந்த பகுதியில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
போலீஸ்காரருக்கு கொரோனா
இதேபோல் கொடுமுடியை சேர்ந்த 55 வயதுடைய போலீஸ்காரர் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை எடுத்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஒத்தக்கடை கணபதிபாளையத்தை சேர்ந்த 45 வயது உடைய பெண் ஒருவருக்கும், கொடுமுடி வையாபுரி செட்டியார் தெருவில் உள்ள 57 வயதுடைய ஆண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இதைத்தொடர்ந்து இவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து சுகாதாரத்துறையினர் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் மூலமாக அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பொதுமக்களிடம் முக கவசம் அணியவும், சானிடைசர் மூலமாக கைகளை அடிக்கடி கழுவவும் சுகாதாரத்துறையினர் வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story