கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுழற்சி முறையில் சில்லரை காய்கனி கடைகள் இயங்கும் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு அறிவிப்பு


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுழற்சி முறையில் சில்லரை காய்கனி கடைகள் இயங்கும் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு அறிவிப்பு
x
தினத்தந்தி 13 April 2021 7:03 AM IST (Updated: 13 April 2021 7:03 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுழற்சி முறையில் சில்லரை காய்கனி கடைகள் இயங்கும் என கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.

சென்னை, 

கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் மீண்டும் பரவி வருவதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு தற்போதுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.

அதன்படி, கடந்த முறை கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது, சில்லரை காய்கனி கடைகள் இயங்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு கோயம்பேடு மார்க்கெட் சில்லரை காய்கனி கடை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு அலுவலகத்தை கடந்த 9-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக, சில்லரை கடைகள் திறக்க விதிக்கப்பட்ட தடையில் சில தளர்வு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் கோயம்பேடு மார்கெட்டில் இருக்கும் 1,800 சில்லரை காய்கனி கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ஒரு கடை வியாபாரி வாரத்தில் 3 நாட்கள் கடையை திறந்து வியாபாரம் செய்து கொள்ள முடியும். வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழுவின் இந்த நடவடிக்கைக்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்து இருந்தாலும், சிலருக்கு இதில் திருப்தி இல்லாமல் இருப்பதும் தெரியவருகிறது. இது ஒருபுறம் இருக்க கடந்த முறை கொரோனா பாதிப்பின் காரணமாக கோயம்பேடு மார்க்கெட் முழுவதுமாக மூடிக்கிடந்தபோது, வாழ்வாதாரம் இழந்து தவித்த அந்த வாழ்க்கைக்கு, இது எவ்வளவோ மேல் என்று பெரும்பாலான வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story