வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு


வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 April 2021 4:48 PM IST (Updated: 13 April 2021 4:48 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து உள்ளது. இன்று ஒரே நாளில் 101 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து உள்ளது. இன்று ஒரே நாளில் 101 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று  பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. 

ஆனாலும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 

முககவசம் அணியாத பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு சுகாதாரத்துறையினர், போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். 

மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. 

பொதுமக்களின் அலட்சியம் காரணமாக சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 

101 பேருக்கு தொற்று

மாவட்டம் முழுவதும் எடுக்கப்பட்ட சளி மாதிரி பரிசோதனையின் முடிவில் இன்று ஒரே நாளில் 101 பேருக்கு தொற்று உறுதியானது. 

அதைத்தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 101 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவரும் வீடு, விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 22 ஆயிரத்து 271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 21 ஆயிரத்து 294 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 358 பேர் பலியானார்கள். 

தற்போது 619 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story