தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் ரூ.31 லட்சம் அபராதம் வசூல்
தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை கொரோனா விதமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.31 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை கொரோனா விதிமுறை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.31 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, போலீஸ் துறை, தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி நகராட்சி, காயல்பட்டினம் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டு அபராதம் வசூலித்து வருகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 37 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரூ.31 லட்சம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை பொது இடங்களில் முககவசம் அணியாமல் சென்ற 15 ஆயிரத்து 64 பேரிட்ம இருந்து ரூ.30 லட்சத்து 12 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 287 பேரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இதே போன்று முறையான விதிமுறைகளை கடைபிடிக்காமல் அதிக அளவில் மக்கள் கூடியதாக 3 பேரிடம் இருந்து ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் ரூ.31 லட்சத்து 57 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story