திரைகள் அமைப்பு


திரைகள் அமைப்பு
x
தினத்தந்தி 13 April 2021 7:02 PM IST (Updated: 13 April 2021 7:02 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வாக்கு எண்ணும் மையத்தில் கேமரா காட்சிகளை பார்வையிட கூடுதல் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்களுக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்
திருப்பூரில் வாக்கு எண்ணும் மையத்தில் கேமரா காட்சிகளை பார்வையிட கூடுதல் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்களுக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையம்
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. துணை ராணுவ வீரர்கள் பட்டாலியன் போலீசார், உள்ளூர் போலீசார் உள்பட 400க்கும் மேற்பட்ட போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பை தினமும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுதவிர வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த மையத்தை திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் தினமும் ஆய்வு செய்து வருகிறார். இதுபோல் 8 சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் தினமும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்து வருகிறார்கள்.
கேமரா காட்சிகள்
வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும். ஆனால் இந்த அறை சிறியதாக இருப்பதாகவும் இதனால் வேட்பாளர்கள் முகவர்கள் பார்வையிடுவதில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும், மாற்று வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிடும் வகையில் வேட்பாளர்களின் முகவர்கள் தங்குவதற்காக முதல்வர் அறைக்கு முன்புறம் அமைக்கப்பட்டு தற்காலிக சாமியானா பந்தலில் கூடுதலாக 2 எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டு கேமரா காட்சிகளை பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இடநெருக்கடி இல்லாமல் வேட்பாளர்களின் முகவர்கள் பார்வையிட முடியும். இதை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.

Next Story