மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பூர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பூர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள் விற்பனை
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக சித்திரை கனியாக மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார்கள். வீடுகளிலும், கோவில்களிலும் சாமிக்கு விதவிதமான கனிகள், பூக்கள் படையலிட்டு வழிபடுவது வழக்கம். நேற்று தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் பூக்களின் விலை உயர்ந்தது. கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு அதிகமாக இருந்ததால் தமிழ்புத்தாண்டு வழிபாட்டில் மக்கள் ஆர்வம் செலுத்தவில்லை. ஆனால் இந்த ஆண்டு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்வதால் மக்கள் நேற்று ஆர்வமுடன் பூ மார்க்கெட்டுக்கு படையெடுத்தனர்.
திருப்பூர்-பல்லடம் ரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூ மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை முதல் கூட்டம், கூட்டமாக வந்து பூக்களை வாங்கி சென்றார்கள். மார்க்கெட்டுக்குள் வரும் அனைவரும் முககவசம் அணிய வலியுறுத்தப்பட்டது. பெரும்பாலானவர்கள் முககவசம் அணிந்து வந்தனர். அதுபோல் வியாபாரிகளும் முககவசம் அணிந்திருந்தனர்.
களை கட்டியது
மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.400க்கும் முல்லை ரூ.400க்கும், அரளி ரூ.200 முதல் ரூ.220கும் சம்பங்கி ரூ.200 முதல் 220க்கும், செவ்வந்தி ரூ.320க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ரோஸ் ரூ.240க்கும், பட்டுப்பூ ரூ.80-க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது. சேலம் நாமக்கல் நிலக்கோட்டை பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மல்லிகை, முல்லை கிலோ ரூ.280க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று ரூ.400 வரை விலை உயர்ந்தது. இருப்பினும் மக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கி சென்றார்கள். திருப்பூரில் பூ விற்பனை நேற்று களைகட்டியது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பூக்களின் விற்பனை நன்றாக இருந்ததாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.
பழக்கடைகளில் கூட்டம்
இதுபோல் பழக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. சாமிக்கு பழ வகைகளை படைத்து வழிபடுவதால் மக்கள் அனைத்துவகையான பழங்களை வாங்கி சென்றார்கள். ஆப்பிள் ஆரஞ்சு, மாம்பழம், பலாப்பழம், கொய்யா, திராட்சை உள்ளிட்ட பழவகைகளை மக்கள் வாங்கி சென்றார்கள். இதனால் தினசரி மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதுபோல் வாழைப்பழம் விற்பனையும் ஜோராக நடைபெற்றது. தமிழ் வருடப்பிறப்பையொட்டி பழங்களின் விலையும் நேற்று உயர்ந்திருந்தன. அவல், பொரியையும் மக்கள் வாங்கி சென்றார்கள்.
Related Tags :
Next Story