கொடைக்கானல் அருகே பாரம்பரிய முறைபடி தேர்வு செய்யப்பட்ட கிராமத்து ராஜா


கொடைக்கானல் அருகே பாரம்பரிய முறைபடி தேர்வு செய்யப்பட்ட கிராமத்து ராஜா
x
தினத்தந்தி 13 April 2021 9:09 PM IST (Updated: 13 April 2021 9:09 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் பாரம்பரிய முறைப்படி கிராமத்து ராஜா தேர்வு செய்யப்பட்டார்.

பெரும்பாறை;
கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் பாரம்பரிய முறைப்படி கிராமத்து ராஜா தேர்வு செய்யப்பட்டார். 
கிராமத்து ராஜா
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை மையமாக கொண்டு மேல்மலை, கீழ்மலை மற்றும் பழனி வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் தாய் கிராமமாக கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் உள்ள தாண்டிக்குடி உள்ளது. இந்த கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி ராஜா என்ற அந்தஸ்துடன் பட்டக்காரர் என்பவர் தலைவராக இருப்பார். அவருக்கு தாண்டிக்குடியில் நடைபெறும் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கப்படும். 
இந்தநிலையில் தாண்டிக்குடி கிராமத்தின் ராஜாவாக கடந்த 40 ஆண்டுகளாக மங்கலகாந்தி என்பவர் இருந்து வந்தார். இதற்கிடையே சமீபத்தில் அவர் இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து புதிய ராஜாவை தேர்வு செய்யும் நிகழ்ச்சி, தாண்டிக்குடியில் நடைபெற்றது. இதற்காக கிராமத்தினரின் முன்னிலையில் ஊர்சாவடியில் உள்ள ஜல்லிக்கோட்டை என்ற நடுகல் பகுதியில் வழிபாடு நடைபெற்றது. அப்போது அப்பிச்சி என்ற பச்சை பந்தல் அமைக்கப்பட்டு, அங்கு பட்டக்காரர் வகையறாக்களை சேர்ந்த நபர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். பின்னர் அவர்களில் ஒருவரை, பாரம்பரிய முறைப்படி தாண்டிக்குடி கரியமால் கோவில் பூசாரி இலைகளால் ஆன பச்சை மாலையை அணிவித்து ராஜாவை அடையாளம் கண்டார். 
பாரம்பரிய முறை
அதன்படி, தாண்டிக்குடியை சேர்ந்த கணேசன் (வயது 43) என்பவர் புதிய ராஜாவாக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி அவரது கால்கள் தரையில் படாதபடி வழிநெடுகிலும் சேலையை விரித்து பூசாரி வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு கருப்பு கம்பளம் விரித்து, பால், பழம் கொடுத்து ராஜாவை உபசரித்தனர். பின்னர் அவரை வீட்டிற்குள் அமர வைத்து, மற்ற சம்பிரதாய சடங்குகளை செய்தனர். அதன்பிறகு கிராம மக்கள் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
பழங்காலத்தில் குறிப்பிட்ட எல்லை பகுதிகளுக்கு ராஜா என்பவர் இருப்பார். மேலும் கிராமங்களுக்கு ஊர் நாட்டாண்மை என்ற அழைக்கப்படும் ஊர் தலைவராக இருப்பார். அந்த வகையில் கொடைக்கானல் அருகே இன்றளவும் பாரம்பரிய முறைப்படி கிராமத்திற்கு ராஜாவை நியமித்து, பொதுமக்கள் விழாக்களில் மரியாதை செலுத்தி வருவதை பலரும் வினோதமாக பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story