புதையல் எடுத்து தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.20 லட்சம் மற்றும் 44 பவுன் நகைகளை மோசடி


புதையல் எடுத்து தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.20 லட்சம் மற்றும் 44 பவுன் நகைகளை மோசடி
x
தினத்தந்தி 13 April 2021 9:16 PM IST (Updated: 13 April 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

புதையல் எடுத்து தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.20 லட்சம் மற்றும் 44 பவுன் நகைகளை மோசடி செய்து கார், புல்லட் வாங்கிய ஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்:
புதையல் எடுத்து தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.20 லட்சம் மற்றும் 44 பவுன் நகைகளை மோசடி செய்து கார், புல்லட் வாங்கிய ஜோதிடரை போலீசார் கைது செய்தனர். 
பரிகார பூஜை 
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அரியபித்தன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 50). விவசாயி. இவருக்கு ஓராண்டுக்கு முன்பு தொழிலில் ந‌‌ஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர், ஜாதகம் பார்க்க விரும்பினார். இதற்காக நல்ல ஜோதிடரை தேடினார். அப்போது திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை தாலுகா மடத்துக்குளம் அருகே உள்ள கனியூரை சேர்ந்த ஜோதிடர் சசிகுமார் (51) என்பவரை பற்றி கேள்விப்பட்டார்.
இதையடுத்து அவர், கனியூருக்கு சென்று ஜோதிடர் சசிகுமாரை சந்தித்து தொழில் நஷ்டம் குறித்து பேசினார். அப்போது் பூஜை மற்றும் பரிகாரம் செய்ய வேண்டும் என்று சசிகுமார் தெரிவித்தார். அந்த பூஜையை தங்கவேல் வீட்டில் வைத்து தான் செய்ய வேண்டும் என்றும், அதற்கு ரூ.1 லட்சம் தரும்படியும் சசிகுமார் கேட்டுள்ளார். அதை உண்மை என நம்பி தங்கவேல் பணத்தை கொடுத்தார்.
புதையல் எடுத்து தருவதாக... 
இதையடுத்து தங்கவேலின் வீட்டுக்கு வந்து சசிகுமார் பூஜை செய்துள்ளார். அந்த பூஜைக்கு ரூ.2 லட்சம் வரை தங்கவேல் செலவு செய்தார். அதன்பின்னர் 2 நாட்கள் கழித்து சசிகுமார் மீண்டும் தங்கவேல் வீட்டுக்கு வந்தார். அப்போது தங்கவேலின் தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், அதை எடுத்து தருவதாகவும் சசிகுமார் கூறினார். அதன்மூலம் தங்கவேலின் க‌‌ஷ்டம் அனைத்தும் தீர்ந்து விடும் என்று ஆசைவார்த்தை கூறினார்.
அதோடு புதையலை எடுப்பதற்கு மீண்டும் பூஜை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். தொழில் ந‌‌ஷ்டத்தில் இருந்த தங்கவேல் குடும்பத்தினர் புதையல் கதையை உண்மை நம்பி விட்டனர். அதை பயன்படுத்தி கொண்ட ஜோதிடர் சசிகுமார் புதையல் எடுப்பதற்கான பூஜை செலவுக்கு என்று கூறி பலமுறை பணம் வாங்கினார். அந்த வகையில் தங்கவேலிடம் இருந்து மொத்தம் ரூ.22 லட்சம் சசிகுமார் வாங்கி உள்ளார்.
கார், புல்லட் வாங்கினார் 
மேலும் தங்கவேலின் மனைவி மற்றும் மருமகளிடம் புதையல் தொடர்பாக பேசி 44 பவுன் நகைகளை சசிகுமார் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி புதையல் இருப்பது போன்ற புகைப்படங்களை தங்கவேலிடம் காண்பித்தார். அதன்மூலம் கார், புல்லட் மோட்டார் சைக்கிள், விலைஉயர்ந்த செல்போன் ஆகியவற்றையும் சசிகுமார் வாங்கி கொண்டார். ஆனால், பேசியபடி புதையல் எதுவும் எடுத்து கொடுக்கவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த தங்கவேல், சசிகுமாரை சந்தித்து கேட்டார். உடனே மறுநாளே வந்து புதையல் எடுத்து தருவதாகவும், புதையல் கிடைக்காவிட்டால் அனைத்தையும் திரும்ப தந்து விடுவதாகவும் உறுதிஅளித்தார். அதன்படி தங்கவேல் வீட்டுக்கு சசிகுமார் சிலருடன் வந்துள்ளார். ஆனால் புதையல் எடுத்து கொடுக்காமல் மாந்திரீகம் செய்து கை, கால் செயல்படாமல் செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டார்.
ஜோதிடர் கைது 
இதையடுத்து தங்கவேல் உறவினர்களுடன் சென்று சசிகுமாரை சந்தித்து பணம், நகைகள், பொருட்களை கேட்டார். அப்போது கார், மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் ரூ.2 லட்சத்தை சசி         குமார் கொடுத்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த தங்கவேல் ரூ.20 லட்சம், 44 பவுன் நகைகளை மீட்டுத்தரும்படி திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அது குறித்து விசாரிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் இன்ஸ்பெக்டர் பானுமதி, சப்-இன்ஸ்பெக்டர் சேகர்பவுல்ராஜ் ஆகியோர் ஜோதிடர் சசிகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தனிப்படை அமைத்து ஜோதிடர் சசிகுமாரை கைது செய்தனர். மேலும் ஜோதிடருடன் வந்து தங்கவேலை மிரட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story