காட்டுயானைகளை விரட்ட கும்கிகள் ரோந்து


காட்டுயானைகளை விரட்ட கும்கிகள் ரோந்து
x
தினத்தந்தி 13 April 2021 9:19 PM IST (Updated: 13 April 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளை விரட்ட கும்கிகளுடன் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடலூர்,

கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளை விரட்ட கும்கிகளுடன் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊருக்குள் புகுந்து அட்டகாசம்

கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நாடுகாணி, தேவாலா, பாண்டியாறு, சேரம்பாடி உள்ளிட்ட இடங்களில் காட்டுயானைகள் ஊருக்குள் முகாமிட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அட்டி, பாண்டியாறு உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை காட்டுயானைகள் தினமும் நள்ளிரவில் உடைத்து சேதப்படுத்தி வந்தன. 

இதனால் அதிருப்தி அடைந்த தோட்ட தொழிலாளர்கள் காட்டு யானைகளிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து டேன்டீ அலுவலர்கள், வனத்துறையினர் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 

கும்கி யானைகள்

இதைத்தொடர்ந்து முதுமலையில் இருந்து ஜான், உதயன் என 2 கும்கி யானைகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டது. பின்னர் கைதகொல்லி என்ற இடத்தில் கும்கி யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டு காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். 

அப்போது ரவுஸ்டன் மலைப்பகுதியில் 2 காட்டு யானைகள் முகாமிட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கும்கி யானைகளுடன் வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து சென்று வருகின்றனர்.

தொடர் நடவடிக்கை

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- 
ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தும் காட்டு யானைகளை உரிய நேரத்தில் சென்று விரட்டும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் காட்டு யானைகள் தொடர்ந்து அப்பகுதிக்கு வருகிறது. 

இதனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முதுமலையில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு ரோந்து பணி நடைபெறுகிறது. இதனால் காட்டு யானைகள் நடமாட்டமும் குறைந்துள்ளது. இருப்பினும் கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story